Monday, 1 December 2014

உணவுப்பொருட்களில் கலப்படமா? கண்டுபிடிக்க இதோ.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
 

உணவு பொருட்களில் கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி?

     இந்த தகவல் தங்களுக்கு தோராயமான கண்டுபிடிப்புக்கான வழி...மற்றபடி தங்களுக்கு துல்லியமான கண்டுபிடிப்புக்கு ஆய்வகம் ஒன்றே தீர்வு ஆகும்.
 கலப்படத்தைக் கண்டு பிடிக்கும் முறையான ஒரு ஆய்வகம் தரும் ஆராய்ச்சி முடிவுகளுக்கு இவை ஈடாகாது.
உணவு குறித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதைப் போன்றே கலப்படமும், மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அக்கலப்படத்தை இனங்கண்டு கொள்வதற்க ஓரளவு இங்கே வழி செய்யப்பட்டுள்ளதேயொழிய, இனிமேல் வரக்கூடிய கலப்படத்தைப் பற்றி எதுவும் இங்கே கூறவில்லை. தோற்றத்திலோ அல்லது குணத்திலோ ஓரளவு ஒத்திருக்கும் சில கலப்படப் பொருட்களை தேடிப்பிடித்து உணவுப் பொருட்களில் கலப்படத்தைச் பெருக்கி வருகின்றனர் சில வணிகர்கள். அவற்றைத் தடுக்கும் சிறு முயற்சி இது.
எனவே நுகர்வோர் இந்த வழிகளைப் பயன்படுத்துவதன் மூலம் கலப்படப் பொருளை கண்டறிவதில், ஒரு சாதகமான அல்லது பாதகமான தீர்வு ஏற்பட்டது என்பதற்காக, ஒரு பொருள் கலப்படமானது அல்லது தரமானது என்று அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது.
குறிப்பிட்ட உணவுப் பொருளில் கலப்படம் செய்யப் பட்டள்ளதா என்று, மேலோட்டமாக அறிவதற்கான வழிவகைகளே இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
எனவே கலப்படமான பொருள் என்று இறுதியாகச் சொல்வதற்கு ஒரு ஆய்வகமே தகுதி படைத்தது ஆகும்.
1.உணவுப் பொருளின் பெயர் : நெய் அல்லது வெண்ணெய்
கலப்படப்பொருள் : வனஸ்பதி
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
ஒரு சோதனைக் குழாயில் ஒரு தேக்கரண்டி உருகிய நெய் அல்லது வெண்ணெய் மற்றும் அதே அளவுக்கு அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அக்கலவையில் ஒரு சிட்டிகை சர்க்கரையைச் சேர்த்து ஒரு நிமிட நேரம் நன்கு குலுக்கவும். பின்னர் ஐந்து நிமிட நேரம் அப்படியே வைத்திருக்கவும். சோதனைக் குழாயின் அடியில் ஊதாநிறம் அல்லது கருஞ்சிவப்பு நிற அமிலப் படிவு காணப்பட்டால் அதில் வனஸ்பதி கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உணரலாம்.
முன் எச்சரிக்கை : வனஸ்பதி பொருள் கட்டாயமாக நல்லெண்ணெய் கலக்கப்பட வேண்டும் என்பதை கண்டறிய இச்சோதனை மிகவும் ஏற்றது. சில நிலக்கரி தார் சாயங்களும் இச்சோதனைக்கு இதே முடிவைத்தரும்.
கலப்படப்பொருள் : கூழாக்கப்பட்ட உருளைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு மற்றும் பிற மாவு வகைகள்.
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
வெண்ணெயில் உருளைக்கிழங்கு அல்லது வள்ளிக் கிழங்கின் கூழ் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய ஒரு சொட்டு டிஞ்சர் அயோடின் விடவும். பழுப்புநிறமுள்ள டிஞ்சர் அயோடின் நீல நிறமாக மாறினால் கலப்படம் நடந்திருக்கிறது என்று பொருள்.
முன் எச்சரிக்கை : இந்தசோதனை கொழுப்பு நீக்கப்பட்ட பால் அல்லது அடர்த்தி கொடுக்கக் கூடிய பொருட்கள் கலந்த பால் இவற்றுக்குப் பொருந்தாது.
2.உணவுப் பொருளின் பெயர் : பால்
கலப்படப்பொருள் : தண்ணீர்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
1. லாக்டோமீட்டரால் பாலின் அடர்த்தியைக் காண வேண்டும. அது எண். 1.026க்கு மூழ்கிருந்தால் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்பது புலனாகும்.
2. ஒரு பளபளப்பான பரப்பைச் செங்குத்தாக வைத்து ஒரு சொட்டு பால் விடவும். சுத்தமான பால் இலேசாக நகரும் அல்லது அப்படியே நிற்கும். கலப்படப் பால் எந்த ஒரு வீழ்படிவம் இல்லாமல் வேகமாக ஓடிவிடும்.
கலப்படப்பொருள் : மாவுப்பொருள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
பாலில் சிறிதளவு டிஞ்சர் அயோடினைச் சேர்க்கவும். அது நிறம் மாறி நீலநிறமானால் மாவுப் பொருள் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை புரிந்து கொள்ளலாம்.
3.உணவுப் பொருளின் பெயர் : கோவா
கலப்படப்பொருள் : மாவுப் பொருள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
மேலே சொன்னவாறு இதற்கும் செய்யவும்.
4.உணவுப் பொருளின் பெயர் : சமையல் எண்ணெய்
கலப்படப்பொருள் : நாய் கடுகு எண்ணெய்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சிறிதளவு மாதிரி எண்ணெயில் ஒரு சில துளிகள் அடர் நைட்ரிக் அமிலம் விட்டு, ஜாக்கிரதையாகக் குலுக்கவும். அமிலப்படிவம் சிவப்பில் இருந்து செம்பழுப்பு நிறத்தில் தோன்றினால் அதில் நாய் கடுகு எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டு இருக்கிறது என்பது பொருளாகும்.
5.உணவுப் பொருளின் பெயர் : சமையல் எண்ணெய்
கலப்படப்பொருள் : தாதுப்பொருள் எண்ணெய்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
இரண்டு மில்லி மாதிரி எண்ணெயுடன் அதே அளவு எண் 2 ஆல்காலிக் பொட்டாஸைச் சேரக்கவும். அக்கலவையை சுமார் 15 நிமிடங்கள் கொதி நீரில் சூடுபடுத்திவிட்டு அதில் 10 மில்லி தண்ணீரைக் கலக்கவும். ஏதேனும் கலங்கல் தென்பட்டால் தாதுப்பொருள் எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டு இருக்கிறது என்று பொருள்.
முன் எச்சரிக்கை :
இந்த சோதனைகள் குறைந்த அளவில் செய்யப்பட்டு உள்ள கலப்படத்தைக கண்டுபிடிப்பதற்கு அல்ல.
கலப்படப்பொருள் : விளக்கெண்ணெய்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
ஒரு சோதனைக் குழாயில் சிறிதளவு எண்ணெயுடன் கொஞ்சம் பெட்ரோலியம் ஈதரை விட்டுக் கரைக்கவும். அக்கலவையை உறை பனி கலவைக்கு நடுவில் வைத்து சிறிது நேரம் குளிர வைக்கவும். ஐந்து நிமிடத்தில் கலங்கல் தென்பட்டால் விளக்கண்ணெய் கலப்படம் செய்யப்பட்டிருப்பது விளங்கும்.
6.உணவுப் பொருளின் பெயர் :. இனிப்பு, ஐஸ்கிரீம், சர்பத் முதலியன.
கலப்படப்பொருள் : மெடானில் எல்லோ (இது ஒரு அனுமதிக்கப்படாத நிலக்கரித்தாரின் சாயம்)
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
சம்பந்தப்பட்ட பொருளில் இருந்து வெதுவெதுப்பான தண்ணீரை விட்டு சாயத்தை தனியாக எடுக்கவும். சில துளிகள் அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை விடும் போது மெஜந்தர் சிவப்பு நிறம்தோன்றுமானால் மெடானில் எல்லோ என்ற சாயம் கலப்படம் செய்யப்பட்டு உள்ளது என்பதாகும்.
7.உணவுப் பொருளின் பெயர் : பருப்பு வகைகள்
கலப்படப்பொருள் : கேசரி பருப்பு
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : பருப்பின் மீது 50 மில்லி நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை விட்டு, 15 நிமிடம் நீரில் வைக்கவும். அப்போது இளஞ்சிவப்பு நிறம் தோன்று மானால் கேசரி பருப்பு கலப்படம் செய்யப்பட்டிருப்பதாகப் பொருள்.
முன் எச்சரிக்கை :
இந்த சோதனை கேசரிப் பருப்பை கண்டுபிடிக்க மட்டுமே உதவும்.
உணவுப் பொருளின் பெயர் : பருப்பு வகைகள்
கலப்படப்பொருள்: களிமண், சிறு கற்கள், சரளைக்கற்கள் போன்றவை (கால்சியம் குரோமேட் மஞ்சள்)
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : இவற்றைச் சற்று கூர்ந்து பார்த்தே கண்டுபிடித்து விடலாம். 5 மில்லி நீருடன் 5 கிராம் பருப்பைச் சேர்த்து அதில் ஒரு சில துளிகள் ஹைட்ரோ குளோரிக் அமிலம் விடவும். அப்போது இளஞ்சிவப்பு நிறம் தோன்றுமானால் கலப்படம் நடந்துள்ளதை அறியலாம்.
8.உணவுப் பொருளின் பெயர் :. பெருங்காயம்
கலப்படப்பொருள் :மாக்கல்லின் தூள் அல்லது மண் சம்பந்தப்பட்ட பொருள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குலுக்கவும். மாக்கல்லாயின் தூள் அல்லது மண் தூள்கள் தானாக அடியில் தங்கிவிடும். சுத்தமான பெருங்காயம் நீரில் கரையும் போதுமான வெள்ளை நிற கரைசலாகும். அது நெருப்பில் கொளுத்தினால் மஞ்சள் நிறத்தில் எரியும்.
முன் எச்சரிக்கை :
கூட்டுப் பெருங்காயத்தில் மாவுப் பொருள் இருப்பதால் ஒரு சிறிது கலங்கல் ஏற்படும் எனினும் சிறிது நேரத்தில் ஙீழே படிந்துவிடும்.
உணவுப் பொருளின் பெயர் : பெருங்காயம்
கலப்படப்பொருள் : மாவுப்பொருள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
பாலுக்குச் செய்த அதே சோதனையைத் தான் இதற்கும் செய்யவேண்டும்.
9.உணவுப் பொருளின் பெயர் : தேயிலை
கலப்படப்பொருள் :சாரமிறக்கிய பின் உள்ள பயனற்ற தேயிலை அல்லது நிறம் கூட்டப் பற்ற காய்ந்த இலை பருப்பின் தவிடு
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
1. இதனை ஈரமான ஒற்றுத்தாளில் சிறிதளவு தூவவும். செயற்கை நிறம் தானாக பிரிந்து விடும்.
2. வெண்மையான பீங்கான் ஓடு அல்லது கண்ணாடித் தகட்டின் மீது சிறிதளவு சுட்ட சுண்ணாம்புத்தூளைப் பரப்பவும். அதன்மேல் சிறிதளவு தேயிலைத் தூளை தூவவும். அப்போது சிவந்த நிறமோ ஆரஞ்சுநிறமோ அல்லது திரிந்த நிறத்திலான கலவையோ தோன்றுமானால் நிலக்கரித்தார் சாயமானது கலப்படம் செய்திருப்பதை உணரலாம். சுத்தமான தேயிலையில் பச்சையம் இருப்பதால் சாதாரண பசும்பொன்நிறம் மட்டுமே சிறிது நேரம் கழித்துத் தோன்றும்.
10.உணவுப் பொருளின் பெயர் : சர்க்கரை
கலப்படப்பொருள் : சாக்கட்டித்தூள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
சிறிதளவு மாதிரியை எடுத்து ஒரு கண்ணாடி டம்ளர் நீரில் கரைத்தால் சாக்கட்டித்தூள் அடியில் படிந்துவிடும்.
11.உணவுப் பொருளின் பெயர் : கரும் மிளகு
கலப்படப்பொருள் : பப்பாளிப்பழத்தின் உலர்ந்த விதைகள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : பப்பாளி விதைகள் முட்டை வடிவில் சுருங்கியவாறு பசும்பழுப்பு அல்லது கரும்பழுப்பு நிறத்தில் தோற்றமளிப்பதால் பார்த்தவுடனேயே எளிதில் கண்டுபிடித்து விடலாம். மேலும் ஒரு கரு மிளகைக் கடித்தால் ஏற்படும் கார குணம் பப்பாளி விதையைக் கடித்தால் ஏற்படாததையும் கண்டு கொள்ளலாம்.
கலப்படப்பொருள் : சொத்தை மிளகு
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
எரிசாராயத்தின் (ஸ்பிரிட்) மேல் சொத்தை மிளகு மிதக்கும்.
12.உணவுப் பொருளின் பெயர் : மஞ்சள் தூள்
கலப்படப்பொருள் : நிறமேற்றப்பட்ட மரத்தூள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு சோதனைக்குழாயில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ளவும். அதில் சில துளிகள் அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை விடவும். உடனே நீல நிறம் தோன்றி அது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தால் அந்த மஞ்சள் தூள் சுத்தமானது என்று பொருள். நிறம் மாறாமல் மஞ்சளாகவே தோற்றமளித்தால் அனுமதிக்கப்படாத செயற்கை சாயமான மெடானில் எல்லோ கலப்படம் செய்யப்பட்டிருப்பதை உணரலாம்.
முன் எச்சரிக்கை : இந்த ஆய்வு மெடானில் எல்லோ கலப்படத்திற்கு.
13.உணவுப் பொருளின் பெயர் :. மிளகாய்த்தூள்
கலப்படப்பொருள் : செங்கல்தூள், உப்புத்தூள் அல்லது முகப்பவுடர்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூளை போடவும். கலப்படத்தூளானால் சாயம் கரைந்து மேலாக வர செங்கல் தூள் ஙீழே படியும். மேலும் வீழ்படிவம் வெண்மையாகவும், வழுவழுப்பாகவும் காணப்பட்டால் சோப்புக்கல் தூள் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்பது தெரியும்.
முன் எச்சரிக்கை : இந்த ஆய்வு மண் சம்பந்தப்பட்ட பொருட்கள் கலந்திருப்பதை கண்டுபிடிக்க மட்டுமே உதவும்.
கலப்படப்பொருள் : வண்ணம்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : கண்ணாடி டம்ளரில் சிறிதளவு மிளகாய்த்தூளை தூவ வேண்டும். வண்ணக்கலவை தானாக நிறம் பிரிந்து வரும். படிப்படியாக அந்த நிறம் குறைந்து விடும்.
14. உணவுப் பொருளின் பெயர் : காப்பித்தூள்
கலப்படப்பொருள் : சிக்கரி
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு டம்ளர் தண்ணீரில் இலேசாக காப்பித்தூளைத் தூவவும். காப்பித்தூள் தண்ணீரின் மேல் மிதக்கும். ஆனால் சிக்கரியோ ஒரு சில வினாடிகளில் மூழ்கி விடும். சிக்கரியில் அதிக அளவு கருவெல்லச்சாயம் இருப்பதால் ஒருவித நிறத் தொடர்ச்சி காணப்படும்.
கலப்படப்பொருள் : புளியங்கொட்டை, பேரீச்சங்கொட்டைத்தூள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சந்தேகத்துக்கு இடமான காப்பித்தூளை ஒரு வெள்ளை மையொற்றுத் தாளின் மீது இலேசாக தூவி அதன் மேல் நீர் தெளிக்கவும். புளியங்கொட்டை அல்லது பேரீச்சங்கொட்டைதூள் கலந்திருந்தால் ஒற்றுத்தாள் சிவப்பு நிறமாக மாறிவிடும்.
15. உணவுப் பொருளின் பெயர் : தூள் வெல்லம், வெல்லம்.
கலப்படப்பொருள் : சலவை சோடா
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சந்தேகப்படும் தூள்வெல்லத்தின் மீது ஒரு சில துளிகள் ஹைட்ரோகுளோரிக் அமிலம் விடவும். நுரைத்து வந்தால் கலப்படம் நடந்துள்ளது என உணரலாம்.
கலப்படப்பொருள் : சாக்கட்டித்தூள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
ஒரு டம்ளர் தண்ணீரில் இரு தேக்கரண்டி வெல்லத்தூளை விட்டுக் கலக்கவும். சாக்கட்டித்தூள் கிழே படிந்துவிடும்.
16 . உணவுப் பொருளின் பெயர் : ரவை
கலப்படப்பொருள் : இரும்புத்தூள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சந்தேகப்படும் ரவையினுள் ஓரு காந்தத்தை எடுத்துத் தூவினால் அதில் இரும்புத்தூள் தானாக ஒட்டிக் கொள்ளும்.
17. உணவுப் பொருளின் பெயர் :அரிசி
கலப்படப்பொருள் : சலவைக்கற்கள் மற்றும் இதர கற்கள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
உள்ளங்கையில் சிறிது அரிசியை வைத்து கையை சிறிது சிறிதாக நீரில் அமிழ்த்தினால் கற்கள் நீரில் மூழ்கிவிடும். அரிசி மிதக்கும்.
18. உணவுப் பொருளின் பெயர் :. கோதுமை மாவு (மைதா)
கலப்படப்பொருள் : மைதா மற்றும் ரவை எடுத்துவிட்டபின் உள்ள ஆட்டா
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
இப்படிப்பட்ட மாவினால் சப்பாததி தயாரிக்க அதிக நீர் விட்டு பிசைய வேண்டியிருக்கும். இதில் சப்பாத்தி தயாரித்தால் சற்று இறுகலாக இருக்கும். சுத்தமான மாவில் தயாராகும் சப்பாத்தி சிறிதளவு இனிப்பாக இருக்கும். ஆனால் கலப்பட மாவில் தயாரிக்கும் சப்பாத்தி சுவையற்றதாக இருக்கும்.
19. உணவுப் பொருளின் பெயர் : சாதாரண உப்பு
கலப்படப்பொருள் : வெள்ளைக்கல்லின் தூள் மற்றும் சாக்கட்டி போன்றவை
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சாதாரண உப்புத்தூளைக் கலக்கவும். சாக்கட்டி கலந்திருந்தால் அந்த நீர் வெள்ளை நிறமாவதோடு மற்ற அசுத்தமான பொருட்கள் கிழே படிந்துவிடும்.
20. உணவுப் பொருளின் பெயர் : தேன்
கலப்படப்பொருள் : சர்க்கரைப்பாகு (தண்ணீரும சர்க்கரையும் கலந்தது)
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
கொஞ்சம் பருத்தி திரியை சுத்தமான தேனில் நனைத்து தீக்குச்சியால் பற்ற வைத்தால் அது தீப்பிடித்து எரியும். கலப்படத் தேனாக இருந்தால் அது எரியாது. அப்படியே எரியத்துவங்கினாலும் பட் பட் என வெடிச்சத்தத்துடன் எரியும்.
முன் எச்சரிக்கை : ஈரம் கலந்த தேனுக்கு மட்டுமே இந்த ஆய்வு.
21. உணவுப் பொருளின் பெயர் : சீரகம்
கலப்படப்பொருள் :கரித்தூள் பூசிய புல் விதைகள், குப்பைக்ஙீரை விதைகள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
விரல்களால் கசக்கிப் பார்த்தால் விரலில் கரி படிந்தால் கலப்படம் என முடிவு செய்துவிடலாம்.
22. உணவுப் பொருளின் பெயர் : கடுகு
கலப்படப்பொருள் : மாவுப்பொருள், நாய்கடுகு, காட்டுச்செடி விதைகள்.
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
கடுகு மேற்பரப்பு வழவழப்பாக இருக்கும். நாய் கடுகு போல் சொறப்பாகவும், மிகக் கறுப்பாகவும் இருக்கும். நிற வித்தியாசம் கூர்ந்து நோக்கினால் தெரியும்.
23. உணவுப் பொருளின் பெயர் : தானியங்கள், கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு.
கலப்படப்பொருள் :நச்சுத்தன்மையுடைய காளான் விதைகள் (எர்காட்)
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
செந்நிற கருப்பு கலந்த நீண்ட தானியங்கள் சோளத்தில் இருந்தால், கலப்படம் இருபது சதவீதம். உப்புத்தண்ணீரில் தானியங்களைப் போட காளான் வகை தானியம் மிதக்கும். நல்ல தானியங்கள் நீரின் அடியில் படியும்.
24. உணவுப் பொருளின் பெயர் : கிராம்பு
கலப்படப்பொருள் :எண்ணெய் எடுத்த கிராம்பு
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
எண்ணெய் எடுத்த கிராம்பு சுருங்கிப் போய் இருக்கும்.

No comments:

Post a Comment