Monday, 1 December 2014

குடிநீர்ப் பரிசோதனை செய்யலாமா?


மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
      குடிநீர் பரிசோதனை பற்றி தெரிந்துகொள்வோம்.
         கிணற்று தண்ணீர், போர் வாட்டர், கேன் வாட்டர், கார்ப்பரேஷன் தண்ணீர் என நாம் குடிக்க பயன்படுத்துவது எந்த வகை குடிநீர்! என்பது முக்கியமல்ல. அது பாதுகாப்பானத? என்பதே முக்கியம் என்கிறார்கள் இந்திய நுகர்வோர் சங்கம் (சிஏஐ) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள்.
                பொதுமக்கள் குடிக்கும் தண்ணீர் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை இந்த அமைப்பினர் ஆய்வு செய்ததில் 51% குடிநீர் மோசமாக உள்ளதாக தெரியவந்துள்ளதாம். தண்ணீரில் கரைந்துள்ள உப்பின் அளவு மற்றும் பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளதா என்பதை கண்டறியும் சோதனையில் தான் இவ்வாறு தெரியவந்துள்ளது.

குடிநீரில் கரைந்துள்ள உப்பின் அளவு 1% குறைவாக இருந்தால் அது சுத்தமான குடிநீராகும். ஆனால், பெரும்பாலான ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற கம்பெனிகளின் கேன் வாட்டர்கள் கூட தரமற்ற நிலையில் தான் உள்ளதாக கூறுகிறார்கள் சிஏஐ அமைப்பினர்.இந்த ஆய்வுகளின் அடிப்படையில் விழிப்புணர்வு கருத்தரங்கு அடையார் முத்தமிழ் பேரவை மன்றத்தில் நடைபெற்றது. இதில், பேசிய உபேந்திரா (தென்மண்டல உதவி இயக்குநர், பி.ஐ.எஸ்), ‘மழை பெய்யும் போது அதை சேமித்து வைக்கும் சரியான முறை நம்மிடம் இல்லை. ஆறு ஏரி குளங்களை மாசு படுத்துவது, வீட்டில் உள்ள குடிநீர் தொட்டியை கூட சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவது, நீரை காய்ச்சாமல் குடிப்பது, கழிப்பிடங்களை உரிய முறையில் பராமரிக்காதது என நிறைய தவறுகளை செய்கிறோம். குடிநீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முதலில் நம்மிடம் இருந்து தான் தொடங்க வேண்டும். நம்மிடம் உள்ள குடிநீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும். இதை செய்தாலே போதும். குடிநீர் பிரச்னையே ஏற்படாது‘ என்றார்.

இந்த கருத்தரங்கில் சிலர் வீட்டில் குடிக்க பயன்படுத்தும் தண்ணீரின் மாதிரிகளை எடுத்து வந்து இருந்தனர். அவர்களுக்கு அங்கேயே பரிசோதித்து ஆய்வு முடிவுகளை கூறினர். மேலும், தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும், மினரல் வாட்டர் பாட்டில்களை பயன்படுத்திய பிறகு நசுக்கி எறிந்து விட வேண்டும், அகன்ற பாத்திரத்தில் குடிநீரை சேமித்து வைப்பது கூடாது போன்ற ஆலோசனைகளையும் வழங்கினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.தொடர்புக்கு: கன்சியூமர் அசோசியேஷன் ஆப் இந்தியா, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர்.

விழிப்புணர்வு வீதி நாடகம்

சி.ஏ.ஐ சார்பில் கடந்த 30ம் தேதி மெரினா கண்ணகி சிலையின் பின்புறம், உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம் நடைபெற்றது. இதில் சுகாதாரம் இல்லாத உணவுகளால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006, சி.ஏ.ஐ&ன் செயல்பாடுகள், உணவுப் பொருட்களில் கலக்கப்படும் கலப்படம் பற்றி தப்பாட்டம், ஒயிலாட்டம் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அத்தியாவசிய உணவு பொருட்களில் செய்யப்படும் கலப்படம், அதை கண்டறியும் முறை குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். உணவுப் பொருட்களில் செய்யப்படும் கலப்படம் குறித்து நீங்களும் புகார் தரலாம். 

                          ( உதவிக்கு)  ஹெல்ப் லைன்: 1800112100, 
     இருபத்திநான்கு மணிநேர இலவச அழைப்பு: 66334346.

நீங்களும் சோதிக்கலாம்

பொதுமக்கள் தங்களது வீடுகளில் பயன்படுத்தும் குடிநீரை பரிசோதித்து பார்க்க விரும்புபவர்கள் சிறிய அளவு சாம்பிள் எடுத்து சிஏஐ அமைப்பை அணுகினால் உதவ காத்திருக்கிறார்கள். இந்த சோதனை 2 விதமாக நடத்தப்படுகிறது.

* முதல் சோதனையில் தண்ணீரில் கரைந்துள்ள உப்பின் அளவை கண்டறிவது. இதற்கு கட்டணம் வசூலிப்பதில்லை.

* 2வது சோதனை தண்ணீரில் கலந்துள்ள பாக்டீரியாக்களை கண்டறிவது. இதற்கு ரூ.30 கட்டணம். சாம்பிள் கொடுத்த 24 மணி நேர இடைவெளியில் நீங்கள் பயன்படுத்தும் குடிநீர் பாதுகாப்பானதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

 பதிவிட்ட தினகரன் நாளிதழுக்கு நன்றிங்க.

No comments:

Post a Comment