Monday, 9 March 2015

பணம் என்றால் என்ன?கள்ளநோட்டு என்றால் என்ன?

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம்  நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.பணம் என்றால் என்ன?நாணயம் என்றால் என்ன?கள்ளநோட்டு அதாவது கள்ளரூபாய் என்றால் என்ன? என பணம் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ளுங்க...பதிவிட்ட ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா இணையதளத்திற்கு நன்றிங்க...
 
பண விபரங்கள்
 
பணம் பற்றிய செய்திகளுக்கு உங்கள் வழிகாட்டி
 
            செலுத்துதல்/செலுத்துவதற்குரிய ஒரு வழியாகிய பணம் இருக்கிறது.  நாணயங்கள், பணத்தாள், திரும்பப் பெறத்தக்க வங்கி வைப்புத் தொகைகள் ஆகியன பணத்தில் அடங்கும். இன்று கடன் அட்டைகள், மின்னணுப்பணம் ஆகியன தொகை செலுத்தும் முறையின் ஒரு முக்கியமான அம்சமாக அமைந்துள்ளன. இருப்பினும் ஒரு சாதாரண மனிதனுக்குப் ணம் என்பது பணத்தாளும், நாணயங்களும்தான். ஏனெனில் இந்தியாவில் தொகை செலுத்தும் முறை, குறிப்பாக சில்லறைப் பரிமாற்றங்கள் இன்னமும் பணத்தாள்கள், நாணயங்கள் ஆகியவற்றைச் சுற்றியே சுழல்கிறது. எப்படி இருப்பினும் ஒரு சாதாரண மனிதன், தான் நாள்தோறும் கையாளும் பணத்தாள், நாணயம் ஆகியன பற்றி மிகச் சிறிதே அறிந்துள்ளான்.
 இந்திய நாணயம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் வினாக்களுக்குப் பதிலளிக்கும் முயற்சி இது.
 
சில அடிப்படைகள்
 
(1)இந்திய நாணயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
 இந்திய நாணயம் இந்திய ரூபாய் என அழைக்கப்படுகிறது. நாணயங்கள் பைசா என அழைக்கப்படுகின்றன. ஒரு ரூபாய் 100 பைசாக்கள் கொண்டது.
 
(2)இன்றைய இந்திய பணத்தாள்களின் இலக்க மதிப்புகள் யாவை?
 இன்று இந்தியாவில் ரூ.5, 10, 20, 50, 100, 500, 1000 ஆகிய இலக்க மதிப்புகளில் வெளியிடப்டுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியினால் (ரிசர்வ் வங்கி) வெளியிடப்படுவதால் இவை வங்கித்தாள்கள் எனப்டும். ரூ.1, ரூ.2 ஆகியவை நாணயமாக வெளியிடப்படுவதால், இந்த மதிப்பிலான பணத்தாள்கள் அச்சிடுவது நிறுத்தப்பட்டது. இருப்பினும் முன்னர் வெளியிடப்பட்ட பணத்தாள்கள் இன்னும் புழக்கத்தில் உள்ளன. ரூ.5 மதிப்பிலான பணத்தாள்கள் அச்சிடுவதும் நிறுத்தப்பட்டுள்து. ரூ5/- மதிப்பிலான நாணயங்களின் தேவைக்கும் அளிப்புக்கும் இடையேயுள்ள இடைவெளியினை நீக்குவதற்காக இவற்றில் மீண்டும் பணத்தாள்கள் அறிமுகப்படுத்துவதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 
(3)இந்தியாவில் தற்போதுள்ள நாணயங்களின் இலக்க மதிப்புகள் எவை?
இந்தியாவில் 10 பைசா, 20 பைசா, 25 பைசா, 50 பைசா, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் ஆகிய இலக்க மதிப்பிலான நாணயங்கள் உள்ளன. 50 பைசா வரை உள்ள நாணயங்கள் சிறு நாணயங்கள் எனவும், ரூபாய் ஒன்றும், அதற்கு மேலும் மதிப்புள்ள நாணயங்கள் ரூபாய் நாணயங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
 
(4)வங்கித் தாள்களும் நாணயங்களும் இந்த இலக்க மதிப்புகளில் மட்டும்தான் வெளியிடப்பட முடியுமா?
 தேவை இல்லை. மத்திய அரசின் அறிவுரைப்படி இந்திய ரிசர்வ் வங்கி ஓராயிரம் ரூபாய், ஐந்தாயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய், அல்லது எந்த இலக்க மதிப்பிலும் வெளியிட இயலும். இருந்தாலும் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 இன் இப்போதைய விதிகளின்படி பத்தாயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட இலக்க மதிப்புகளில் பணத்தாள்கள் இருக்க முடியாது. நாணயங்களை ரூ.1000 இலக்க மதிப்புவரை வெளியிடமுடியும்.
 
பண நிர்வாகம்
 
(5)பண நிர்வாகத்தில் ரிசர்வ் வங்கியின் பங்கு என்ன?
 ரிசர்வ் வங்கி இந்தியாவில் பண நிர்வாகம் செய்கிறது. அரசு ரிசர்வ் வங்கியின் ஆலோசனையின் பேரில் பல்வேறு இலக்க மதிப்புகளை முடிவு செய்கிறது. ரிசர்வ் வங்கி, வங்கி நோட்டுகளை வடிவமைப்பதில் (பாதுகாப்புத் தன்மைகள் உட்பட) அரசுடன் சேர்ந்து பணிசெய்கிறது. இலக் மதிப்பு வாரியாக தேவைப்படும் பணத்தாள்களின் அளவினை ரிசர்வ் வங்கி மதிப்பிட்டு இந்திய அரசின் மூலம் பல்வேறு அச்சகங்களுக்கு தனது தேவைப்பட்டியலை அளிக்கிறது. அச்சகங்களிலிருந்து பெறப்படும் பணத்தாள்கள் வெளியிடப்படுவதுடன் இருப்பும் வைத்திருக்கப்படுகிறது. வங்கிகளிலிருந்தும் பணவறையிலிருந்தும் பெறப்படும் பணத்தாள்கள் பரிசோதிக்கப் படுகின்றன. புழக்கத்துக்குத் தகுதியானவை திரும்பவும் வழங்கப் படுகின்றன. புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளின் தரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு மற்றவை (அழுக்காடைந்தவையும், சேதமடைந்தவையும்) அழிக்கப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 இன் அடிப்படையில் ரிசர்வ் வங்கி பண நிர்வாகப் ணியைப் பெறுகிறது.
 
(6)இந்திய அரசின் பங்கு  என்ன?
 நாணயச் சட்டம் 1906 இன்படி காலத்துக்குக் காலம் அதில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களின் அடிப்படையில் நாணய உருவாக்கம் இந்திய அரசின் பொறுப்பில் உள்ளது. நாணய வடிவமைப்பினையும் பல்வேறு இலக்க மதிப்புகளில் நாணயங்களை அடித்தலையும் இந்திய அரசு மேற்கொள்கிறது.
 
(7)எவ்வளவு வங்கி நோட்டுகள், அச்சிடப்பட வேண்டும், மற்றும் எவ்வளவு மதிப்பிற்கு என்பதை முடிவு செய்பவர் யார்? எந்த அடிப்படையில்?  
இந்திய ரிசர்வ் வங்கி, எவ்வளவு மொத்த வங்கி நோட்டுகள் மற்றும் எவ்வளவு மதிப்புற்கு என்பதை முடிவு செய்கிறது. எவ்வளவு அச்சிடப்பட வேண்டும் என்பது பெரும்பாலும் புழக்கத்திற்குத் தேவையான வங்கித்தாள்களுக்காக குறிப்பிடப்படும் வருடாந்திர அதிகரிப்பு, அழுக்கடைந்த நோட்டுகளை அகற்றுதல், இருப்புத் தேவைகள் ஆகியவற்றைப்  பொருத்து முடிவு செய்யப்படுகிறது.
 
(8)எவ்வளவு நாணயங்கள் அடிக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்பவர் யார்?
 இந்திய அரசு எவ்வளவு நாணயங்கள் அடிக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்கிறது.
 
(9)வங்கி நோட்டுகளின் தேவையை ரிசர்வ் வங்கி எவ்வாறு முடிவு செய்கிறது?
 பொருளாதார வளர்ச்சி விகிதம், மாற்றீடு செய்யும் தேவை, இருப்புத் தேவைகள் ஆகியவற்றைப் புள்ளியியல் முறைகளில் கணக்கிட்டு மதிப்பீடு செய்கிறது.
 
(10)ரிசர்வ் வங்கி நாணயம் / பணத்தாள்களை எவ்வாறு மக்களிடம் சென்றடையச் செய்கிறது?  
ரிசர்வ் வங்கி அகமதாபாத், பெங்களூர், போபால், புவனேசுவர், பேலாபூர் (நவிமும்பை), கோல்கத்தா, சண்டிகார், சென்னை, குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, மும்பை (கோட்டை), நாக்பூர், புதுடில்லி, பாட்னா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள தனது அலுவலகங்களின் மூலம் ணச் செயல்பாடுகளை மேற்கொள்கிறது. இந்த அலுவலகங்கள் பணத்தாள்களை அச்சிடும் அச்சகங்களிலிருந்து புதுத்தாள்களை நேரடியாகப் பெறுகின்றன. அதைப்போன்றே கோல்கத்தா, ஹைதராபாத், மும்பை, புதுடில்லி ஆகிய இடங்களில் அமைந்துள்ள ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் நாணயக் கூடங்களிலிருந்து நாணயங்களைப் பெறுகின்றன. இந்த அலுவலகங்கள் அவற்றை மற்ற ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்புகின்றன. பணத்தாள்களும் ரூபாய் நாணயங்களும் பணவறையிலும், சிறு நாணயங்கள் சிறு நாணயக்கூடத்திலும் இருப்பு வைக்கப்படுகின்றன. வங்கியின் கிளைகள் பணவறையிலிருந்தும், சிறுநாணயக்கூடத்தில்  இருந்தும் பணத்தாள்களையும் நாணயங்களையும் பெற்று பொது மக்களுக்கு வழங்குகின்றன.
 
(11) பணவறை என்பது என்ன?
 பணத்தாள்களையும் நாணயங்களையும் வழங்குவதற்கு ஏற்ற வகையில் ரிசர்வ் வங்கி தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிக் கிளைகளுக்கு பணவறைகளை நிறுவ அதிகாரம் அளித்துள்ளது. இவை உண்மையில் ரிசர்வ் வங்கிக்காக பணத்தாள்களையும் நாணயங்களையும் சேர்த்து வைக்கும் பண்டக சாலை ஆகும். தற்போது 4368 பணவறைகள் உள்ளன. பணவறை வங்கிகள் தங்கள் செயலாக்கப் பகுதியிலுள்ள மற்ற வங்கிகளுக்கு பணத்தாள்களையும் நாணயங்களையும் வழங்கவேண்டும்.
 
(12) சிறு மதிப்பு நாணயக்கூடம்  என்பது என்ன?
 சில கிளை வங்கிகள் சிறுநாணயங்களைச் சேமித்து வைத்துக் கொளவ்தற்காக சிறுமதிப்பு நாணயக்கூடங்களை அமைத்துக்கொள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நாடெங்கிலும் 3708 சிறுமதிப்பு நாணயக் கூடங்கள் உள்ளன. சிறுமதிப்பு நாணயக்கூடங்கள் தங்கள் செயலாக்க எல்லையில் உள்ள மற்ற  வங்கிக் கிளைளுக்கு நாணயங்களை வழங்குகின்றன.
 
(13) பணத்தாள்களும், நாணயங்களும் புழக்கத்துக்குப் பின் திரும்ப வரும்போது என்ன நிகழ்கிறது?  
புழக்கத்திலிருந்து திரும்ப வரும் பணத்தாள்களும் நாணயங்களும் ரிசர்வ் வங்கியின் அலுவலங்களில் செலுத்தப்படுகின்றன. ரிசர்வ் வங்கி பிறகு அவற்றை, திரும்பவும் வழங்குவதற்கு ஏற்றது என்றும், ஏற்றத்தகாதது என்றும் பிரிக்கிறது. வழங்குவதற்குத் தகுதியல்லாதவை சிறுசிறு துகள்களாக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. திரும்பப் பெறப்பட்ட நாணயங்கள் உருக்கப்படுவதற்காக நாணயக்கூடங்கள் அனுப்பப் படுகின்றன.
 
(14) பொதுமக்கள் பணத்தாள்களையும் நாணயங்களையும் எங்கிருந்து பெறலாம்?
 ரிசர்வ் வங்கியின் எந்த அலுவலகத்திலிருந்தும், மற்றும் பணவறையையும் சிறுமதிப்பு நாணயக்கூடமும் கொண்டுள்ள, எந்த வங்கிக்கிளைகளிலிருந்தும் பணத்தாள்களையும் நாணயங்களையும் பெறலாம்.
 
இன்றைய நிகழ்வுகள்
 
(15) பணத்தாள்களும் நாணயங்களும் ஏன் பற்றாக்குறையாக உள்ளன?
 இது முழுவதும் சரி அன்று. சமீப நாட்கள் வரை பணத்தாள்களின் அளிப்பு தேவைக்குக் குறைவாகவே இருந்தது உண்மையே. இதற்குரிய முதன்மையான காரணம் இந்தியச் சமுதாயம் இன்னமும் ரொக்கப் பணம் காசையே முதன்மையாகக் கொண்டுள்ளது. இருந்தாலும், இப்போது பணத்தாள்களைப் பொறுத்தவரை அளிப்பில் சிக்கல் ஏதும் இல்லை. நாணயங்களைப் பொறுத்தவரை இந்திய அரசு நாணயங்களை இறக்குமதி செய்வது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாணயங்கள் தேவைக்கேற்ப அளிப்பு குறைவு என்னும் தோற்றம், மக்களின் பணத்தாள்களுக்கு முதன்மை கொடுக்கும் மனப்பாங்கினாலும் அதிகரிக்கப்படுகிறது.
 
 (16) பணத்தாள்களையே நம்பியிருப்பதைக் குறைக்க வழி உண்டா?
 உண்டு. காசேலைகள், கடன் அட்டை, பற்று அட்டை, மின்னணு நிதிப் பரிமாற்றம் ஆகியன பெரிதும் பழக்கத்துக்கு வந்தால் பணத்தாள்களுக்கு உரிய தேவை குறையும் என்று எதிர்பார்க்கலாம்.
 
(17) இந்த நிலையில் பணத்தாள்கள் நாணயங்கள் ஆகியவற்றின் அளிப்பினை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா?
 ஆம். பணத்தாள்கள், நாணயங்கள் ஆகியவற்றின் அளிப்பினை அதிகரிக் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அவற்றுள் சில:
1)       இப்போதுள்ள அரசுக்குச் சொந்தமான அச்சகங்களும், நாணயக்கூடங்களும் புதுமைப்படுத்தப்படுகின்றன.
2)      ரிசர்வ் வங்கிக்கு முழு உரிமையுடைய துணை நிறுவனமாகிய இந்திய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் லிமிட்டெட்டின் கீழ் இரண்டு அதி நவீன வசதிகளைக் கொண்ட அச்சகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
3)      தேவை - அளிப்பு இடைவெளியை இணைக்க அரசு ஒருமுறை நடவடிக்கையாக இறக்குமதி கூட செய்தது.
4)      இந்திய அரசின் நான்கு நாணயக்கூடங்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்ப்பட்டுள்ளது.
5)      நான்கு நாணயக்கூடங்களின் அளிப்புக்குக் கூடுதலாக இந்திய அரசு ரூபாய் நாணயங்களை இறக்குமதியும் செய்து வருகிறது. இன்று வரை 2 பில்லியன் ரூபாய் நாணயங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
 
 (18) ரூ.1, ரூ.2, ரூ.5 பணத்தாள்கள் ஏன் அச்சிடப்படுவதில்லை?
 அளவினைப் பொருத்வரை புழக்கத்திலுள்ள மொத்த பணத்தாள்களில் இந்த சிற்றிலக்க மதிப்புப் பணத்தாள்கள் 57 விழுக்காடு. ஆனால் மதிப்பினைப் பொருத்தவரை இது 7 விழுக்காடு மட்டுமே. இந்தத் தாள்களின் சராசரி வாழ்நாள் ஒரு ஆண்டுக்குள்ளே தான். எனவே இவற்றை அச்சிடுதல் மற்றும சேவை அளித்தலுக்காக ஏற்படும் செலவு அவற்றின் வாழ்நாளுடன் பொருந்தவில்லை. எனவே இந்த இலக்க மதிப்புகள் நாணயங்களாக்கப்பட்டன. இந்த இலக்க மதிப்புகளில் உள்ள தேவை அளிப்பு இடைவெளியினைக் குறைக்க, மீண்டும் ரூ.5 இலக்க மதிப்பில் பணத்தாள் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
அழுக்கடைந்த, சேதமடைந்த பணத்தாள்கள்
 
 (19) அழுக்கடைந்த, சேதமடைந்த பணத்தாள்கள் என்பவை யாவை?
 அழுக்கடைந்த பணத்தாள்கள் என்பன அதிகப்பயன்பாட்டினால் மக்கியும், மடங்கியும் போன பணத்தாள்கள் ஆகும். சேதமடைந்த தாள்கள் என்பன கிழிந்த, வடிவம் மாறியவை, எரிந்தவை, அழுக்கு நீக்க முயன்று சேதப்பட்டவை, செல்லரிக்கப்பட்டவை போன்றன. இரண்டு துண்டாக்கப்பட்ட, இருபகுதிகளிலும் எண்களைக் கொண்ட, ஆனால் இரண்டுமே ஒரே எண்ணாக இருக்கும் நிலையில் உள்ள பணத்தாள் இன்று அழுக்கடைந்த பணத்தாளாகக் கருதப்படுகிறது.
 
(20 )அத்தகைய பணத்தாள்கள் உரிய மதிப்புக்கு மாற்ற இயலுமா?
 ஆம். அழுக்கடைந்த பணத்தாள்கள் எல்லா வங்கிக் கிளைகளிலும் பெறப்படுதற்கும் மாற்றப்படுவதற்கும் உரியன.
 
 (21) அழுக்கடைந்த அல்லது சேதமடைந்த பணத்தாள்களை எவ்வளவு மதிப்புக்கு மாற்றிக்கொள்ள முடியும்?
 அழுக்கடைந்த பணத்தாள்களுக்கு உரிய முழு மதிப்புத் தொகையினைப் ஒருவர் பெற முடியும். சேதமடைந்த பணத்தாள்களுக்கு உரிய மாற்று மதிப்பு இந்திய ரிசர்வ் வங்கி விதிகள், 1975 (பணத்தாள் மதிப்பு திரும்பப்பெறல்) இன்படி வழங்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 பிரிவு 28 இன் கீழ் இந்த விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. விதிகளில் கூறியபடி மதிப்பீட்டுக்குப் பின், பொதுமக்கள் இத்தகைய பணத்தாள்களுக்கு உரிய மதிப்பினைப் பெற முடியும். ரூ. 10க்கும் அதற்கு மேலும் இலக்க மதிப்பு கொண்ட கிழிந்த/சேதமடைந்த  பணத்தாள்களுக்கு மாற்று மதிப்பு முழு மதிப்பு, அரைமதிப்பு, ஒன்றுமில்லை ஆகிய நிலைகளில் இப்போது விதிகள் உள்ளன. ரூ.1, ரூ.2, ரூ.5 பணத்தாள்களைப் பொருத்தவரை அத்தாள்களின் நிலையின் அடிப்படையில் முழு மதிப்போ அல்லது பணம் பெறாமை என்ற நிலையில் தான் விதிகள் உள்ளன.
 
(22) பணத்தாள்கள் மதிப்பு திரும்பப்பெறல் விதிகளின்படி எந்த வகையான பணத்தாள்கள் தொகையைத் திரும்பப் பெற இயலாது?
 பின்வரும் பணத்தாள்கள் திரும்பப்பெறும் விதிகளின்கீழ் மாற்றுத்தொகையைப் பெறுவதற்கு உரியவை அல்ல.
1.        முழு பணத்தாளின் பாதிப்பரப்புக்  குறைவாக உள்வை,
2.       வரிசை எண்ணின் பெரும்பகுதி இல்லாதவை, அதாவது வரிசை எண்ணிற்கு முன்னெழுத்தும் மூன்று எண்களும் அல்லது நான்கு எண்களும் இல்லாத ரூ.5ம் அதற்குட்பட்ட இலக்க மதிப்புள்ள நோட்டுகள்,  ரூ.10ம் அதற்கு மேலும் உள்ள பணத்தாள்களில் இந்தக் குறைபாடு, வரிசை எண்கள் இருக்கும் இரண்டு இடங்களிலும் இருக்குமானால்,
3.       ரிசர்வ் வங்கியின் எந்த அலுவலகத்தினாலாவது அந்தத்தாள் மதிப்பிழக்கச் செய்யப்பட்டிருந்தால் அல்லது முன்னமே தொகை திரும்பச் செலுத்தப்பட்டிருந்தால்.
4.       கள்ள நோட்டு என கண்டுபிடிக்கப்பட்டால்.
5.       வேண்டுமென்றே துண்டிக்கப்பட்டிருந்தால், சேதப்டுத்தப் பட்டிருந்தால், திருத்தப்பட்டிருந்தால்,
6.       தேவையற்ற வார்த்தைகளைக் கொண்டிருந்தால், அரசியல் பண்புடைய செய்திகளைத் தரக்கூடிய அல்லது தருகின்ற நோக்கமுடைய வார்த்தைகள்/ படங்கள் கொண்டிருந்தால்
 
(23)ஒரு பணத்தாள் தொகையைத் திரும்பப் பெறுவதற்கு உரியது அன்று என்று கண்டுபிடிக்கப்பட்டால் என்ன செய்யப்படும்?
 பணம் திரும்பப் பெறுவதற்கு உரியதல்லாத தாள்களை, அவற்றைப் பெற்றுக்கொண்ட வங்கிகள் அவற்றை வைத்துக்கொண்டு பின்னர் அழிக்கப்படுவதற்காக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிவைக்கின்றன.
 
 (24)அழுக்கடைந்த/சேதமடைந்த பணத்தாள்கள் எங்கே ஏற்றுக்கொள்ளப் படுகின்றன?
 எல்லா வங்கிகளுக்கும் தங்கள் கொடுக்கல் வாங்கல் முகப்புகளில் அழுக்கடைந்த தாள்களைப் பெற்றுக்கொண்டு அதற்குரிய மாற்று மதிப்பினைச் செலுத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளன. சேதமடைந்த/கிழிந்த நோட்டுகளை பணவறைகள் கொண்ட கிளைகளில் மாற்றிக் கொள்ளலாம்
 
தற்கால பணத்தாள்களின் தோற்றங்கள்
 
 (25)இப்போது புழக்கத்தில் உள்ள பணத்தாள்களின் பொது அம்சங்கள் எவை?
 ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100 ஆகிய முன்னர் வெளியிடப்பட்டு இப்போதும் புழக்கத்தில் உள்ள பணத்தாள்கள், அசோகா தூண் நீர்க்குறியீட்டையும் அசோகா தூண் உருவப்படத்தையும் கொண்டுள்ளன. முன்னர் வெளியிடப்பட்ட ரூ.500 பணத்தாள்கள் அதாவது 1987முதல், அசோகா தூண் நீர்க் குறியையும் மகாத்மா காந்தி உருவப்படத்தையும் கொண்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி இப்போது மகாத்மா காந்தி வரிசையில் பணத்தாள்களை வெளியிட்டுக் கொண்டு வருகிறது. அவை  மகாத்மா காந்தியின்  உருவப் படத்தையும் நீர்க்குறியீட்டையும் கொண்டிருக்கும். ஆகஸ்டு 2001  இல் திரும்பவும் வெளியிடப்பட்ட ரூ.5 பணத்தாள்கள் அசோகா தூண் நீர்க் குறியீட்டையும், அசோகா தூண் உருவப்படத்தையும் கொண்டிருந்தது. வங்கியால் வெளியிடப்படும் இந்த தாள்கள் யாவும் மறுக்க இயலாத செலாவணிப் பணங்கள் ஆகும்.
 
 (26)அந்த மாற்றம் ஏன் கொண்டுவரப்பட்டது?
 உலகெங்கிலும் உள் மத்திய வங்கிகள் தங்கள் பணத்தாள்களின் வடிவத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. இதற்குரிய முதன்மையான காரணம் கள்ள நோட்டுகள் உருவாவதைக் கடினமாக்குவதுதான். இந்தியாவும் இதே கொள்கையைப் பின்பற்றுகிறது.
 
 (27) மகாத்மா காந்தி வரிசை பணத்தாள்களில் ஏதேனும் சிறப்பு அமசங்கள் உள்ளனவா?
புதிய மகாத்மா காந்தி வரிசை பணத்தாள்கள், பழைய தாள்களுடன், ஒப்பிடும்போது பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. அவை:
  1.  பாதுகாப்பு ழை: ரூ.10, ரூ.20, ரூ.50 ஆகிய தாள்கள் பார்க்கத்தக்க, ஆனால் முழுவதும் உள்ளே பதிக்கப்பட்ட பாதுகாப்புச் சாளரம் கொண்ட பாதுகாப்பு ழையைக் கொண்டுள்ளது. ரூ.100, ரூ.500 ஆகிய தாள்கள் பார்க்கத்தக்க சாளரமுள்ள பாதுகாப்பு ழையைக் கொண்டுள்ளது. இந்த ழை பாதி வெளியில் தெரிவதாகவும் பாதி உள்ளே பதிக்கப் பட்டதாகவும் உள்ளது. வெளிச்சத்தில் பிடித்துப் பார்க்கும் போது இந்த ழை தொடர்ச்சியான ஒரு கோடாகத் தெரியும். ரூ.1000 தாள்களைத் தவிர மற்றவற்றில் இந்த ழையில் ‘பாரத்’ என்பது தேவநாகரி எழுத்து வடிவத்திலும் ‘RBI’ என்பதும் மாறி மாறித் தோற்றமளிக்கும். ரூ.1000 பணத்தாளின் பாதுகாப்பு நூலிழையில் பாரத்’ என்பது தேவநாகரி எழுத்து வடிவிலும் 1000, ‘RBI’ என்பனவும் இருக்கும். இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட தாள்கள் எழுத்துகள் எதுவும் இல்லாமல், பார்க்க இயலாத, முழுவதும் உள்ளே பதிக்கப்பட்ட பாதுகாப்பு ழைகளைக் கொண்டிருந்தன.
  2.  மறைந்திருக்கும் மதிப்பெண்: மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு வலது பக்கத்திலுள்ள செங்குத்துப் பட்டைக் கோட்டில் அந்தந்த இலக்க மதிப்புக்கு ஏற்றவாறு 20,50,100,500,1000 என்ற எண்கள் மறைந்திருக்கும். உள்ளங்கையில் பிடித்து அதன்மேல் 45° கோணத்தில் வெளிச்சம் விழுமாறு செய்தால் மட்டுமே அந்த மதிப்பினைக் காண முடியும். இல்லையேல் இந்தத் தோற்றம் வெறும் செங்குத்துக் கோடாகவே தெரியும்.
  3. நுண்ணிய எழுத்துகள்: மகாத்மா காந்தி உருவப்படத்துக்கும் செங்ககுத்துப்பட்டைக் கோட்டுக்கும் இடையில் இந்த அம்சம் உள்ளது. ரூ.10, ரூ.20 தாள்களில் RBI என்ற எழுத்துக்களும் தாள்களின் இலக்க மதிப்புகளும் உள்ளன. உருப்பெருக்கக் கண்ணாடியின் வழியே இதனைத் தெளிவாகக் காணமுடியும்.
  4. அடையாளக்குறியீடு: ரூ.10 தாளைத் தவிர மற்றவற்றில் நீர்க்குறியீட்டுச் சாளரத்துக்கு இடப்புறத்தில் ஒரு செதுக்குருவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தோற்றம் பல்வேறு இயக்க மதிப்புத் தாள்களில் வெவ்வேறு வடிவங்களில் உள்ளது (ரூ.20 இல் செங்குத்து நீள்சதுரம், ரூ.50 இல் சதுரம், ரூ.100இல் முக்கோணம், ரூ.500 இல் வட்டம், ரூ.1000 இல் சாய்சதுரம்) இது பார்வை இல்லாதவர்கள் அத்தாளின் இலக்க மதிப்பினை அடையாளம் காண உதவுகிறது.
  5.  செதுக்குருவம்: மகாத்மா காந்தி உருவப்படம், ரிசர்வ் வங்கி முத்திரை, உத்தரவாத உறுதிமொழி வாசகம், இடப்பக்கத்தில் அசோகா தூண் சின்னம், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையொப்பம் ஆகியன செதுக்குருவத்தில் அச்சிடப்பட்டுள்ளன. அதாவது தூக்கலான அச்சுகளில் ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.1000 ஆகிய தாள்களில் அச்சிடப்பட்டுள்ளன.
  6. ஒளிரும் தன்மை: தாள்களின் எண்ணிடம் ஒளிரும் மையினால் அச்சிடப்பட்டுள்ளது. தாள்களில் ஒளியிழைகளும் உள்ளன. புற ஊதாக் கதிர்விளக்கின் ஒளியில் பார்க்கும்போது இவ்விரண்டையும் காணலாம்.
  7. பார்வைக் கோணத்தில் மாறுபடும் மை: ரூ.500 மற்றும் ரூ.1000 பணத்தாள்களில் ரூ.500 மற்றும்  ரூ.1000 இன் மேல் (லேசான மஞ்சள், லேசான ஊதா, பழுப்பு ஆகிய மாற்றப்பட்ட வண்ணத் திட்டங்களில்)  ஆகியன பார்வைத் தோற்றத்தில் மாறுபடும் அதாவது வண்ணம் மாறித்தோன்றும் மையினால் அச்சிடப்பட்டுள்ளன. இந்தத் தாள்கள் கிடைமட்டமாகப் பிடித்துப் பார்த்தால் இந்த இலக்கங்களின் வண்ணங்கள் பச்சையாகவும் ஒரு கோணத்தில் பிடித்துப் பார்த்தால் நீல நிறமாகவும் தோன்றும்.
கள்ள நோட்டுகள்
 
 (28) நல்ல தாளுக்கும் கள்ள தாளுக்கும் உள்ள வேறுபாட்டினை அறிவது எப்படி? அதாவது நல்ல நோட்டா? கள்ளநோட்டா? என தெரிந்துகொள்வது எப்படி?
 மேலே குறிப்பிடப்பட்ட அம்சங்கள் இல்லாத தாள்கள் கள்ள தாள்கள் என சந்தேகிக்கப்படுகின்றன. இவை துல்லியமாகப் பரிசோதிக்கப் படுகின்றன.
 
 (29) கள்ள நோட்டுகளை அச்சிடுவது, புழக்கத்தில் விடுவது ஆகியன தொடர்பான சட்ட விதிகள் எவை?
 கள்ள தாள்களை அச்சிடுவதும், புழக்கத்தில் விடுவதும் இந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 489A இலிருந்து 489 E வரை உள்ள விதிகளின்படி தண்டனைக்குரிய குற்றங்களாகும். குற்றத்தின் தன்மைமையைப் பொறுத்து அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.
 
நினைவில் கொள்க: விழிப்புணர்வுடைய மக்களே கள்ளத்தாள்களுக்கு எதிரான மிகச் சிறந்த பாதுகாவலர்கள்.
 
இது ஒரு மின்னணு ஆவணம். மிகச் சரியான வாசகத்துக்கு அச்சிடப்பட்ட வெளியீட்டினைப் பார்க்கவும்.
 

No comments:

Post a Comment