Friday, 25 July 2014



சுதந்திர தினத்தன்று பிளாஸ்டிக் தேசியக் கொடியை பயன்படுத்தினால் 3 ஆண்டு சிறை...
இந்தியாவின் 68–வது சுதந்திர தினம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15–ந்தேதி நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த கொண்டாட்டத்தின் போது பேப்பரில் தயாராகும் மூவர்ண தேசியக் கொடிகளையே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்த கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய உள்துறையின் பொதுப்பிரிவு இயக்குனர் சியாமளாமோகன் இது தொடர்பாக எல்லா மாநிலங்களுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
அரசு மற்றும் தனியார் நடத்தும் முக்கிய விழாக்களில் பேப்பர் தேசியக் கொடிக்கு பதிலாக பிளாஸ்டிக்கில் தயாராகும் தேசியக் கொடிகளை பயன்படுத்துகிறார்கள். பிளாஸ்டிக் தேசியக் கொடிகள் எளிதில் மக்காது. இதனால் சுற்றுச்சூழல் மாசு பாதிப்பு ஏற்படும்.
மேலும் பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை கவுரவமான முறையில் அகற்றுவதும் பெரும் பிரச்சினையாக உள்ளது. எனவே அனைத்து விழாக்களிலும் பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது.
பேப்பர் தேசியக் கொடிகளை பயன்படுத்த மக்களிடம் மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் அந்த உத்தரவில் கூறியுள்ளார்.
பிளாஸ்டிக் தேசியக் கொடியை விற்பவர்கள், வாங்குபவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் மீது தேசிய கவுரவம் இழிவு படுத்தப்படுவதை தடுக்கும் சட்டம்–1971–ன் கீழ் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் பிளாஸ்டிக் தேசிய கொடியை பயன்படுத்துபவர்கள் மீது 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதித்து நடவடிக்கை எடுக்க முடியும்.

No comments:

Post a Comment