Friday, 22 November 2013

பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு-கருத்துக்கணிப்பு.

மரியாதைக்குரியவர்களே,
                             வணக்கம் 
                 நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து தினமணி நாளிதழின் கருத்துக்கணிப்பு இங்கு காண்போம்.

28 August 2013 02:54 AM IST
படிப்படியாகக் குறைக்கலாம்
மலிவானதும் எளிதானதுமான பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பை உடனடியாகவோ முற்றிலுமாகவோ நிறுத்த முடியாது. பிளாஸ்டிக் பொருள்களால் உயிர் வாழ்க்கைக்கு ஏற்படும் அபாயங்களை எடுத்துக்காட்டி மக்களுக்கு புரியவைக்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கம் அங்கங்கு நடத்தி மக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கலாம். பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது சாத்தியமாகாவிட்டாலும் படிப்படியாகவாவது மக்கள் ஒத்துழைப்புடன் குறைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேட்டைத் தவிர்க்கலாம்.
வி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, வரட்டணப்பள்ளி.

மாற்று ஏற்பாடு தேவை
பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுகின்ற இடம் நீர்வள ஆதார மையங்களான வாய்க்கால், ஏரி, குளம் என்றாகிவிட்ட நிலையில் பாசனத்திற்கு செல்கின்ற நீரின் தரமும் அளவும் சீர்கேடு அடைகின்றன. இந்நிலையில் பிளாஸ்டிக் கப், பைகள் தயாரிப்பு மற்றும் உபயோகத்திற்கு தடைவிதிப்பதே சாலச்சிறந்தது. பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களுக்கு காகிதப்பை, சணல் பைகள் தயாரிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்து தேவைப்பட்டால் வங்கி கடன் உதவி, அரசு மானியம் போன்றவற்றை வழங்கலாம்.
த. நாகராஜன், சிவகாசி.

துணிப்பை பயன்பாடு
முன்பு நாம் பயன்படுத்திய துணிப்பை மக்க 5 மாதங்களும், காகிதப் பை மக்க 1 மாதமும் ஆகும். ஆனால், பிளாஸ்டிக் பைகள் மட்க 1 லட்சம் ஆண்டுகள் ஆகுமென விஞ்ஞானிகள் கூறுவதிலிருந்து பிளாஸ்டிக் பொருள்களின் பாதிப்பு புரிய வரும். நாம் முன்பு பயன்படுத்திய ஓலைப் பெட்டி, துணிப்பை ஆகியவற்றை பயன்படுத்தலாம். ஆனால் இவைகளை தூக்க நாகரிகம் தடுக்கலாம். தடை என்பது நிரந்தர தடையாக இருக்க வேண்டுமே தவிர பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பாளர்களுக்காக தளர்த்தப்படாததாக இருக்க வேண்டும். பிளாஸ்டிக் தயாரிப்பதை நிறுத்தினால் பயன்பாடும் முற்றிலும் ஒழிந்துவிடும்.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

தவிர்க்க இயலாது
பிளாஸ்டிக் தயாரிப்புகளை இன்றைய நிலையில் முற்றிலுமாகத் தவிர்ப்பது இயலாது. அந்த அளவுக்குப் பிளாஸ்டிக் பயன்பாடு வளர்ந்துவிட்டது. அரசு அனுமதிக்கும் வகையான பிளாஸ்டிக்கை மட்டும் பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக்கைக் கண்டறிந்த அறிவியல் அதை மக்க வைக்கும் முறையையும் கண்டறிய வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளைச் சாலை அமைக்கப் பயன்படுத்த வேண்டும்.
ச.மு. விமலானந்தன், திருப்பத்தூர்.

சாலைகள் அமைக்கலாம்
காகித ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வர உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி மூலமாக போக்குவரத்துக்கான சாலைகள் அமைக்கலாம். வீடுதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளைச் சேர்த்து வைத்து உள்ளாட்சியினரின் திடக்கழிவு மேலாண்மை மூலமாக கொள்முதல் செய்வதும் பிளாஸ்டிக் சேகரிக்கும் நபர்களை ஊக்குவித்து பொருளீட்டச் செய்வதும் சாத்தியமே அன்றி ஒரு விழுக்காடு கூட தவிர்த்தல் என்பது சாத்தியமில்லை.
மு. கிருட்டிணசுவாமி, சத்துவாச்சாரி.
 
உற்பத்திக்குத் தடை தேவை
மண்ணுக்கு அடியில் புதைக்கப்படக்கூடிய அல்லது சுவரில் மாட்டக்கூடிய இடங்களில் பிளாஸ்டிக் குழாய்களைப் பயன்படுத்துவது தவறாகாது. துருப்பிடிக்கும் தன்மை இரும்புக்கு இருப்பதால் அதற்குப் பதிலியே பிளாஸ்டிக்.
அன்றாட வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களான வாளி, குடம், தட்டு போன்ற ஏராளமான பொருள்களுக்கு உலோகங்கள், மரம் ஆகியவற்றை மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டு வர வேண்டும். அனைத்திலும் மேலாக விற்பனையைத் தடை செய்வதைவிட உற்பத்திக்குத் தடை விதிப்பது பயனளிக்கும் செயலாகும்.
தெ. சுந்தரமகாலிங்கம், வத்திராயிருப்பு.

அறிவுறுத்தலாம்
பிளாஸ்டிக் ஒன்றும் உயிரை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லியல்ல. இன்னும் சொல்லப்போனால் எங்கும் நீக்கமற நிறைந்து, எளியவர்களின் கைக்கெட்டும் சிக்கனப் பொருள். வேண்டுமானால் இதன் விளைவைப்பற்றி விழிப்புணர்வு செய்து மக்கும் தன்மை அற்றவற்றை தடை செய்யலாம். முற்றிலும் தவிர்ப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று, படிப்படியாக உபயோகத்தைக் குறைக்க அறிவுறுத்தலாம்.
ம. இராமநாதன், திண்டுக்கல்.

கடினமான செயல்
பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலும் பயன்பாட்டிலிருந்து அகற்றுவது கடினமான செயல். பேப்பர், சணல் போன்றவற்றால் தயாரிக்கப்படும் மக்கள் உபயோகப் பொருள்களுக்கு அரசு வரிச்சலுகை அளித்து ஊக்கப்படுத்தினால் பிளாஸ்டிக் பயன்பாடு பெருமளவில் குறைய வாய்ப்புண்டு. பால் விநியோகத்தை அரசு நேரடியாக பால் நிலையங்களில் வழங்கினாலே பிளாஸ்டிக் பயன்பாடு குறையும்.
ஆர். நாகராஜன், சென்னை.

மனநிலை மாற வேண்டும்
மளிகைக் கடை முதல் கம்ப்யூட்டர் நிறுவனம் வரை பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகம் தவிர்க்க இயலாததாகிவிட்டது. பிளாஸ்டிக்குக்கு மாற்றான பொருள் வரும்வரை, அதன் உபயோகம் தவிர்க்க இயலாதது. மேலும் துணிகளால் செய்த பைகளை பலர் கேவலமாய் எண்ணுகிறார்கள். இந்த மனநிலை மாற வேண்டும்.
கோ. ராஜேஷ் கோபால், சென்னை.

பித்தளை ,அலுமினியம் , இந்தோலியம் ,செம்பு , நிக்கல் ,போன்ற ஒன்பதுக்கும் மேற்பட்ட பல உலோகங்களுக்கு மாற்று உலோகமாக விலை, பயன்பாடு என்ற அடிப்படையில் எவர்சில்வர் வந்தது. அந்த எவர்சில்வருக்கு , மலிவான விலை, எளிதாக எடுத்து செல்லும் வசதி என்ற அடிப்படையில் நெகிழி எனும் பிளாஸ்டிக் மாற்றுபொருளாகக வந்தது. இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை விட அதன் வசதியைதான் மக்கள் பெரிதாக நினைக்கிறார்கள். எனவே நெகிழிக்கு இணையாக மலிவான மாற்று பொருளை மக்களுக்கு தர முயல வழிவகை காணவேண்டும். இதுபோக நெகிழி கழிவுகளை பயன்படுத்த சாலை அமைக்க முடியும் என்று சொல்கிறார்கள். அப்படி இந்த கழிவுகளை பயன்படுத்தவும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். நெகிழி பைகள் ,பொருள்கள் தயாரிப்பளர்களை மாற்று மூல பொருள் கொண்டு தயாரிக்க ஊக்க படுத்தவேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக நெகிழி பொருட்களை விற்க முன்னறிவிப்பு கொடுத்து தடை செய்ய அரசு முன்வரவேண்டும்
பதிவுசெய்தவர்  08/29/2013 12:35

பிளாஸ்டிக் குறியீட்டு எண்கள்.

மரியாதைக்குரியவர்களே,
                             வணக்கம்.
                         நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு- வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.பிளாஸ்டிக் குறியீட்டு எண்களும் அதன் விளக்கமும் பற்றி காண்போம்.நாம் வாங்கும் எந்த பிளாஸ்டிக் பைகள் அல்லது டப்பாக்கள் அல்லது பாட்டில்கள் அல்லது எந்த பொருட்களிலும் அதனடியிலோ அல்லது ஏதாவது ஒரு இடத்திலோ ஒரு முக்கோண வடிவமும் அதனுள்ளே ஒன்று முதல் ஏழு வரை ஆன ஏதாவது ஒரு எண்ணோ அச்சிடப்பட்டு இருக்கும் .அதன் விளக்கம் கீழ்கண்டவாறு.....
எண் -1  ஒன்று என குறிப்பிட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில்தண்ணீர் பாட்டில்கள்,குளிர்பான பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு இருக்கும்.
 எண்-2 இரண்டு என குறிப்பிட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில் ஷாம்பு டப்பா மற்றும் சில கடினமான பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கப்பட்டு இருக்கும்.
எண்-3 மூன்று என குறிப்பிட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில் உணவுப்பொட்டலங்கள் கட்டும்  பைகள் ,பைப்புகள்,கிளினிங் பவுடர்கள் அடைத்துள்ள டப்பாக்கள்,போன்றவைகள் தயாரிக்கப்பட்டு இருக்கும்.இது ''டையாக்ஸின்''போன்ற நச்சு வாயுக்களை வெளியேற்றுவதால் நம் உடலுக்கு கலவிதமான தீங்குகளை விளைவிக்கும்.சூடான பொருட்கள் எதுவும் இதில் வைக்கக்கூடாது.
எண்-4 நான்கு என குறிப்பிட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில் குளிர்சாதன பெட்டியில் வைக்கும் பொருட்களும்,கேரியர் பைகளும் தயாரிக்கப்படும்.
எண்-5 ஐந்து என குறிப்பிட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில்  சூடான உணவுப்பொருட்களை வைக்கவோ,பயன்படுத்தவோ கூடாது.மைக்ரோவேவ் அடுப்பில் பயன்படுத்தலாம்.
எண்-6 ஆறு என குறிப்பிட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில் உணவுப்பொருட்களை வைத்து சாப்பிடலாம்.ஆனால் எடுத்துச்செல்லக்கூடாது.
எண்-7 ஏழு என்ற எண் பொறிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை உலக நாடுகள் தடை செய்து உள்ளன.ஆனால் இந்தியாவில் மட்டும் இல்லை.இதிலிருந்தே எத்தகைய தீங்கானது என அறியலாம்.
 1முதல் 4 வரை உள்ள எண் பொறித்த பிளாஸ்டிக்குகள் உணவு எடுத்துச்செல்ல பயன்படுத்தக்கூடாது.அவை வெப்ப சூழல் மாறும்போது'கார்சினோசின்' எனப்படும் வாயுவை வெளியிடுவதால் புற்றுநோய்கள் வரும் 
 5 மற்றும் 6 எண் பொறிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை தண்ணீர் மற்றும் உணவுப்பொருட்களை வைக்கவோ,அல்லது எடுத்துச்செல்லவோ கூடாது.

.பிளாஸ்டிக் நன்மையா?தீமையா?

மரியாதைக்குரியவர்களே,
                             வணக்கம்.
                  நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.பிளாஸ்டிக் நன்மையா?தீமையா? என இங்கு காண்போம்.                

                முந்தைய காலங்களில் காகிதங்களில் பொட்டலமாகவும்,துணிப்பைகளில் அல்லது மூங்கில் கூடைகளிலும் எந்த பொருட்களானாலும் வாங்கி வருவோம்.ஆனால் இன்றைய காலங்களில்    கையை வீசி கொண்டு வீட்டிலிருந்து கிளம்பி கடைக்கு போய் வரும் போது கை நிறைய  பிளாஸ்டிக் பையில் பொருட்களை வாங்கி கொண்டு வருவது இப்போது நாகரீகமாகிவிட்டது..   துணி பை அல்லது வயர் கூடையில்  பொருட்களை வாங்கி கொண்டு வந்தவர்களை, பிளாஸ்டிக் பையை உருவாக்கி அதையே உபோயோகிக்க வைத்து  அது இல்லாமல் இருக்கவே முடியாது என்ற சூழ்நிலையை உருவாக்கி க்கொண்டோம்?.குறைந்த செலவில் நிறைந்த பலனைக்கொடுக்கும்வகையில் ஒருமுறை வாங்கியதும் எளிதில் மக்காமல் பலநுறு ஆண்டுகள் நிலைத்திருக்கக் கூடியது பிளாஸ்டிக்என்ற தவறான எண்ணம் மக்களிடையே பரவி விட்டது. பிளாஸ்டிக் குடம் இல்லாத வீட்டைக் காட்டுங்கள் என்று யாராவது நம்மிடம் சவால் விட்டால் நிச்சயமாக நாம் தோற்றுத்தான் போவோம்.


                இருந்தாலும் சமுதாய நோக்கோடு  பயோடெக் பேக்ஸ் வெளியிட்ட அறிக்கையில்  இருந்து  ஒரு சில துளிகள்:

ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள்.கடலில் மிதந்துகொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே!  தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.

பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு ஆகும் காலமோ 100-1000 ஆண்டுகள்

பிளாஸ்டிக் பாட்டில்கள் எக்காலத்திலும் அழியாது.

எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது.

பிளாஸ்டிக்கை எதிர்த்து குரல் கொடுப்பது ஒருபுறம் இருந்தாலும், அதற்கான மாற்றுபொருட்களை கண்டுபிடிப்பதிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அரசும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

 எனவே பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கப் பழகுவோம்.  அவசரத் தேவைக்கு ஒன்றிரண்டு முறை பிளாஸ்டிக் பையை பயன்படுத்தினால், அந்த பிளாஸ்டிக் பொருட்களை குப்பையோடு குப்பையாகப் போடாமல், சேமித்து மறுசுழற்சிக்கு அனுப்புவோம்.



பிளாஸ்டிக் சாலை குறித்த கருத்தரங்கம்


மரியாதைக்குரியவர்களே,
                       வணக்கம்.
           நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பகத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.பிளாஸ்டிக் தீமைகளும் அதனை ஆக்கப்பூர்வ பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளுதலும் பற்றி இங்கு காண்போம்.
  • பிளாஸ்டிக் சாலை குறித்த கருத்தரங்கம் காயல்பட்டினம் நகர்மன்றத்தலைவி ஐ.ஆபிதா தலைமையில் நடைபெற்றது.நகரிலும் பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க ஆய்வு!!..




04 மே 2012 காலை 09:04
பிளாஸ்டிக் சாலை குறித்த கருத்தரங்கம் காயல்பட்டினம் நகராட்சியில் நேற்று (03-05-12 ) காலை நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு நகர்மன்ற தலைவர் ஐ.ஆபிதா தலைமை வகித்தார். நகர்மன்ற ஆணையர் திரு.அசோக் குமார் மற்றும் வருவாய்த்துறை ஆய்வாளர் திரு.பொன்வேல் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
100_2745
நேற்றைய கருத்தரங்களில் பிளாஸ்டிக் சாலைகளால் ஏற்படும் நன்மைகள் அனைத்தையும் அசைப்படக்கருவி ஊடாக மதுரை தியாகராஜர் கல்லூரி வேதியல் துறை தலைவர் திரு.வாசுதேவன் விளக்கமளித்தார்.
100_2748
நகர்மன்ற உறுப்பினர்.திரு.இ.எம் சாமி அறிமுக உரை ஆற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தார்.
100_2752
100_2774
பிளாஸ்டிக் சாலை செய்முறை
பிளாஸ்டிக் சாலை செய்முறை குறித்து திரு.வாசுதேவன் குறிப்பிடுகையில் இயந்திரத்தில் போட்ட சாலை போடும் சிறு சரளைக் கற்கள், 170 டிகிரி செல்சியஸ் சூடானதும், சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பிளாஸ்டிக் குப்பை தூவப்படுகிறது. அவை உருகியதும், தார் ஊற்றி, கலவை தயாரிக்கப்பட்டு, சாலை போடப்படுகிறது.
100_2791
பிளாஸ்டிக் சாலைகளாகும் இந்தியா
பிளாஸ்டிக் பிடிப்புத் தன்மை காரணமாக, பத்து ஆண்டுகளுக்கு மேலாகவும், சாலைகள் சேதமடையாமல் உள்ளன.பிளாஸ்டிக் கொண்டு அமைக்கும் சாலை, நீண்ட காலம் நீடிக்கும் என்பதைக் கண்டறிந்த, மதுரை தியாகராஜர் கல்லூரி வேதியல் துறை தலைவர் வாசுதேவன் நேரடி ஆலோசனையின்படி இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் போடப்பட்டு வருவதை குறிப்பிட்டார்.
100_2775
பிளாஸ்டிக் சாலை குறித்த சந்தேககங்களுக்கு பதில்
கருத்தரங்க இறுதியில் பிளாஸ்டிக் சாலைகளினால் விளையும் நன்மை, தீமைகள் குறித்த பொதுமக்களின் கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கு மதுரை தியாகராஜர் கல்லூரி வேதியல் துறை தலைவர் திரு.வாசுதேவன் விளக்கமளித்தார்.
DOUBT
இக்கருத்தரங்கில் பொதுமக்கள் கலந்துக்கொண்டு  பயன் பெற்றனர். இக்கருத்தரங்கிற்கு ஆத்தூர் பேரூராட்சி தலைவர் திரு.எம்.பி முருகானந்தம்,ஆத்தூர் E.O திரு.முத்து கிருஷ்ணன், ஆறுமுகநேரி E.O குமார் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
தற்போது 10 மாநகராட்சி 119 நகராட்சி, 90 பேரூராட்சிகள், 45 ஊராட்சிகளில் 446.50 கிலோ மீட்டர் நீளத்துக்கு பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்பட்டுவருகிறது 2012-13-ம் ஆண்டில் ரூ.100 கோடி செலவில் இந்த திட்டம்தொடர்ந்து செயல்படுத்தப்படும் நிலையில் உள்ளது என அரசு அறிவித்துள்ளது.
100_2747
இதனை தொடர்ந்து நமது நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் பிளாஸ்டிக் சாலை அமைக்க திட்டம் இருப்பதாக நகர்மன்ற தலைவர் ஐ .ஆபிதா தெரிவித்தார்.
100_2827
நிகழ்ச்சியின் இறுதியில் திரு.வாசுதேவன் அவர்களுக்கு நகர்மன்ற ஆணையர் திரு.அசோக் குமார் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார.இதனை அடுத்து நன்றி உரையுடன் இக்கருத்தரங்கம் நிறைவுற்றது.
நகரில் பிளாஸ்டிக் சாலை அமைக்க திட்டம்
தற்போது நகரில் பிளாஸ்டிக் சாலை அமையவிருக்கும் பகுதிகளான கூலக்கடை பஜார், கொச்சியார் தெரு மற்றும் அருனாசலபுரம் ஆகிய பகுதிகளுக்கு நகர்மன்ற தலைவர் ஐ.ஆபிதாவுடன் நேரில் சென்று திரு. வாசுதேவன் ஆய்வு செய்தார்.
100_2830
100_2844
இந்த ஆய்வின்போது ஒப்பந்தக்காரர் திரு.ஜமீன் ராஜ் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களான M.S.M சம்சுத்தீன், M.M.T. பீவி பாத்திமா,மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் உடன் இருந்தனர்.
100_2853
100_2863
பிளாஸ்டிக் சாலை போடும்போது தாம் வருகை தந்து  சில ஆலோசனைகள் வழங்குவதாக  திரு.வாசுதேவன் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
நம்மால் தவிர்க்கமுடியாத அடிமையாக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவினை பயனுள்ள வகையில்  பிளாஸ்டிக் தார்ச்சாலை போட கண்டுபிடித்த முனைவர்.வாசுதேவன்  மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர்  அவர்களை நாமும் வாழ்த்துவோம்.இச்செய்தி வெளியிட்ட www.kayalnews.com வலைத்தளத்திற்கு நன்றிகள் பல கூறுவோம்.

பிளாஸ்டிக் ரோட்டிற்கு மத்திய அரசு அங்கீகாரம்

மரியாதைக்குரியவர்களே,
                                  வணக்கம்.
                              நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

பிளாஸ்டிக் ரோட்டிற்கு மத்திய அரசு அங்கீகாரம்


              திருப்பரங்குன்றம்:மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லூரி வேதியியல் பேராசிரியர் வாசுதேவன் கண்டுபிடித்த பிளாஸ்டிக் ரோட்டிற்கு, மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மறு பயன்பாட்டிற்கு பயன்படாத பாலித்தீன் கவர்கள், பிஸ்கட், சாக்லேட் கவர்கள், தெர்மாகோல் போன்றவற்றை மீண்டும் பயன்படுத்தவும், பூமி வெப்பமடைவதை தடுக்கவும், மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லூரி பேராசிரியர் வாசுதேவன் ஆராய்ச்சி மேற்கொண்டார். இவற்றை பயன்படுத்தி பிளாஸ்டிக் ரோடு அமைக்க முடிவு செய்தார். கழிவுகளை எரிக்காமல், தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஜல்லிகளில் கலந்து பிளாஸ்டிக் கோட்டிங் கொடுத்து, அவற்றுடன் தார் சேர்த்து பிளாஸ்டிக் ரோடு அமைத்தார்.

பிளாஸ்டிக் ரோடு: உலகில் முதன்முறையாக இவரது கண்டுபிடிப்பான பிளாஸ்டிக் ரோடு, முதலில் கோவில்பட்டியில் 2002ல் போடப் பட்டது. கிராம வளர்ச்சித் துறை மூலம் தமிழகத்தில் 2000க்கும் அதிகமான கி.மீ., பிளாஸ்டிக் ரோடுகள் போடப்பட்டன. மும்பை, கேரளாவில் ரோடுகள் அமைக்கும் பணி நடக்கிறது.தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் இவரது ஆராய்ச்சிக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி, பிளாஸ்டிக் ரோடு போடும் வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்ய கேட்டது.
ஆய்வு அறிக்கையை வாசுதேவன் சமர்ப்பித்தார். அது புத்தகமாக வெளியிடப்பட்டது. பிளாஸ்டிக் ரோடுக்கு தியாக ராஜர் இன்ஜி., கல்லூரிக்கு மத்திய அரசு காப்புரிமை 2006ல் வழங்கியது.நிதி உதவி: பிளாஸ்டிக் ரோட்டின் தன்மை, தரம், உழைப்பு, ஆயுள், பயன்கள் குறித்து ஆய்வு செய்ய, இரண்டாம் கட்டமாக 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையை ஆய்வு செய்த மாசு கட்டுப்பாட்டு வாரியம், பிளாஸ்டிக் தார் ரோடுகள் அமைப்பதால் ஏற்படும் நன்மைகள், சாதாரண ரோட்டிற்கும், பிளாஸ்டிக் ரோட்டிற்கும் உள்ள வித்தியாசம், செலவுகள் விவரம் அடங்கிய குறிப்புகளை தற்போது புத்தகமாக வெளியிட்டுள்ளது.
இந்த புத்தகங்களை இந்தியா முழுவதிலுமுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ரோடுகள் பராமரிப்புத் துறைகளுக்கும் அனுப்பியுள்ளது. அந்த புத்தகத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் ரோடுகள் தரமானதாகவும், நீடித்து உழைக்கக் கூடியது என்றும் குறிப்பிட்டுள்ளது.
அங்கீகாரம்: மத்திய கிராம வளர்ச்சி அமைச்ச கத்தின் தேசிய கிராமப்புற ரோடுகள் வளர்ச்சி நிறுவனம், கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் தார் ரோடுகள் அமைக்க அங்கீகரித்து வழிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளது. அதற்கான “கைடு லைன்’ வெளியிட்டுள்ளது. கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் தார் ரோடுகள் அமைக்க ஏற்பாடு செய்துள்ளது.
பேராசிரியர் வாசுதேவன் கூறியதாவது:மத்திய அரசு அளித்துள்ள கைடு லைன் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பிளாஸ்டிக் தார் ரோடுகள் நீடித்து உழைக்கும். சாதாரண தார் ரோட்டைக் காட்டிலும் ஐந்தாண்டுகள் கூடுதல் பலன் தரும். மழைநீர் ஊடுருவி சாலைகள் பழுதடைவதில்லை. பராமரிப்பு செலவுகள் கிடையாது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும்.
சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவது தடுக்கப்படும். தட்பவெட்பநிலையை சீராக்க உதவும். பிளாஸ்டிக் கழிவுகளால் இவ்வுலகிற்கு ஏற்படும் அபாயத்தை நீக்கலாம். எனது முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்த கல்லூரி நிர்வாகத்துக்கும், தொழில் நுட்பத்தில் உதவியவர்களுக்கும் நன்றி.பிளாஸ்டிக் தார் ரோடு அமைக்க விரும்புவோர் 0452-2482240 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு வாசுதேவன் கூறினார்.
Source Thanks : dinamalar