மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து தினமணி நாளிதழின் கருத்துக்கணிப்பு இங்கு காண்போம்.
28 August 2013 02:54 AM IST
படிப்படியாகக் குறைக்கலாம்
மலிவானதும் எளிதானதுமான பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பை உடனடியாகவோ
முற்றிலுமாகவோ நிறுத்த முடியாது. பிளாஸ்டிக் பொருள்களால் உயிர்
வாழ்க்கைக்கு ஏற்படும் அபாயங்களை எடுத்துக்காட்டி மக்களுக்கு புரியவைக்கும்
வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கம் அங்கங்கு நடத்தி மக்களிடையே
பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கலாம். பிளாஸ்டிக் தயாரிப்புகளை
முற்றிலுமாகத் தவிர்ப்பது சாத்தியமாகாவிட்டாலும் படிப்படியாகவாவது மக்கள்
ஒத்துழைப்புடன் குறைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு பிளாஸ்டிக்கால் ஏற்படும்
சுற்றுச்சூழல் கேட்டைத் தவிர்க்கலாம்.
வி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, வரட்டணப்பள்ளி.
மாற்று ஏற்பாடு தேவை
பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுகின்ற இடம் நீர்வள ஆதார மையங்களான
வாய்க்கால், ஏரி, குளம் என்றாகிவிட்ட நிலையில் பாசனத்திற்கு செல்கின்ற
நீரின் தரமும் அளவும் சீர்கேடு அடைகின்றன. இந்நிலையில் பிளாஸ்டிக் கப்,
பைகள் தயாரிப்பு மற்றும் உபயோகத்திற்கு தடைவிதிப்பதே சாலச்சிறந்தது.
பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களுக்கு காகிதப்பை, சணல் பைகள் தயாரிப்பதற்கான
மாற்று ஏற்பாடுகள் செய்து தேவைப்பட்டால் வங்கி கடன் உதவி, அரசு மானியம்
போன்றவற்றை வழங்கலாம்.
த. நாகராஜன், சிவகாசி.
துணிப்பை பயன்பாடு
முன்பு நாம் பயன்படுத்திய துணிப்பை மக்க 5 மாதங்களும், காகிதப் பை மக்க 1
மாதமும் ஆகும். ஆனால், பிளாஸ்டிக் பைகள் மட்க 1 லட்சம் ஆண்டுகள் ஆகுமென
விஞ்ஞானிகள் கூறுவதிலிருந்து பிளாஸ்டிக் பொருள்களின் பாதிப்பு புரிய வரும்.
நாம் முன்பு பயன்படுத்திய ஓலைப் பெட்டி, துணிப்பை ஆகியவற்றை
பயன்படுத்தலாம். ஆனால் இவைகளை தூக்க நாகரிகம் தடுக்கலாம். தடை என்பது
நிரந்தர தடையாக இருக்க வேண்டுமே தவிர பிளாஸ்டிக் பொருள்
தயாரிப்பாளர்களுக்காக தளர்த்தப்படாததாக இருக்க வேண்டும். பிளாஸ்டிக்
தயாரிப்பதை நிறுத்தினால் பயன்பாடும் முற்றிலும் ஒழிந்துவிடும்.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
தவிர்க்க இயலாது
பிளாஸ்டிக் தயாரிப்புகளை இன்றைய நிலையில் முற்றிலுமாகத் தவிர்ப்பது
இயலாது. அந்த அளவுக்குப் பிளாஸ்டிக் பயன்பாடு வளர்ந்துவிட்டது. அரசு
அனுமதிக்கும் வகையான பிளாஸ்டிக்கை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
பிளாஸ்டிக்கைக் கண்டறிந்த அறிவியல் அதை மக்க வைக்கும் முறையையும் கண்டறிய
வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளைச் சாலை அமைக்கப் பயன்படுத்த வேண்டும்.
ச.மு. விமலானந்தன், திருப்பத்தூர்.
சாலைகள் அமைக்கலாம்
காகித ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்
புழக்கத்தில் வர உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி மூலமாக
போக்குவரத்துக்கான சாலைகள் அமைக்கலாம். வீடுதோறும் விழிப்புணர்வு
ஏற்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளைச் சேர்த்து வைத்து உள்ளாட்சியினரின்
திடக்கழிவு மேலாண்மை மூலமாக கொள்முதல் செய்வதும் பிளாஸ்டிக் சேகரிக்கும்
நபர்களை ஊக்குவித்து பொருளீட்டச் செய்வதும் சாத்தியமே அன்றி ஒரு விழுக்காடு
கூட தவிர்த்தல் என்பது சாத்தியமில்லை.
மு. கிருட்டிணசுவாமி, சத்துவாச்சாரி.
உற்பத்திக்குத் தடை தேவை
மண்ணுக்கு அடியில் புதைக்கப்படக்கூடிய அல்லது சுவரில் மாட்டக்கூடிய
இடங்களில் பிளாஸ்டிக் குழாய்களைப் பயன்படுத்துவது தவறாகாது.
துருப்பிடிக்கும் தன்மை இரும்புக்கு இருப்பதால் அதற்குப் பதிலியே
பிளாஸ்டிக்.
அன்றாட வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களான வாளி, குடம், தட்டு போன்ற
ஏராளமான பொருள்களுக்கு உலோகங்கள், மரம் ஆகியவற்றை மீண்டும்
புழக்கத்துக்குக் கொண்டு வர வேண்டும். அனைத்திலும் மேலாக விற்பனையைத் தடை
செய்வதைவிட உற்பத்திக்குத் தடை விதிப்பது பயனளிக்கும் செயலாகும்.
தெ. சுந்தரமகாலிங்கம், வத்திராயிருப்பு.
அறிவுறுத்தலாம்
பிளாஸ்டிக் ஒன்றும் உயிரை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லியல்ல. இன்னும்
சொல்லப்போனால் எங்கும் நீக்கமற நிறைந்து, எளியவர்களின் கைக்கெட்டும்
சிக்கனப் பொருள். வேண்டுமானால் இதன் விளைவைப்பற்றி விழிப்புணர்வு செய்து
மக்கும் தன்மை அற்றவற்றை தடை செய்யலாம். முற்றிலும் தவிர்ப்பது என்பது
சாத்தியமற்ற ஒன்று, படிப்படியாக உபயோகத்தைக் குறைக்க அறிவுறுத்தலாம்.
ம. இராமநாதன், திண்டுக்கல்.
கடினமான செயல்
பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலும் பயன்பாட்டிலிருந்து அகற்றுவது
கடினமான செயல். பேப்பர், சணல் போன்றவற்றால் தயாரிக்கப்படும் மக்கள் உபயோகப்
பொருள்களுக்கு அரசு வரிச்சலுகை அளித்து ஊக்கப்படுத்தினால் பிளாஸ்டிக்
பயன்பாடு பெருமளவில் குறைய வாய்ப்புண்டு. பால் விநியோகத்தை அரசு நேரடியாக
பால் நிலையங்களில் வழங்கினாலே பிளாஸ்டிக் பயன்பாடு குறையும்.
ஆர். நாகராஜன், சென்னை.
மனநிலை மாற வேண்டும்
மளிகைக் கடை முதல் கம்ப்யூட்டர் நிறுவனம் வரை பிளாஸ்டிக் பொருள்களின்
உபயோகம் தவிர்க்க இயலாததாகிவிட்டது. பிளாஸ்டிக்குக்கு மாற்றான பொருள்
வரும்வரை, அதன் உபயோகம் தவிர்க்க இயலாதது. மேலும் துணிகளால் செய்த பைகளை
பலர் கேவலமாய் எண்ணுகிறார்கள். இந்த மனநிலை மாற வேண்டும்.
கோ. ராஜேஷ் கோபால், சென்னை.
பித்தளை ,அலுமினியம் , இந்தோலியம் ,செம்பு , நிக்கல்
,போன்ற ஒன்பதுக்கும் மேற்பட்ட பல உலோகங்களுக்கு மாற்று உலோகமாக விலை,
பயன்பாடு என்ற அடிப்படையில் எவர்சில்வர் வந்தது. அந்த எவர்சில்வருக்கு ,
மலிவான விலை, எளிதாக எடுத்து செல்லும் வசதி என்ற அடிப்படையில் நெகிழி எனும்
பிளாஸ்டிக் மாற்றுபொருளாகக வந்தது. இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல்
பாதிப்பை விட அதன் வசதியைதான் மக்கள் பெரிதாக நினைக்கிறார்கள். எனவே
நெகிழிக்கு இணையாக மலிவான மாற்று பொருளை மக்களுக்கு தர முயல வழிவகை
காணவேண்டும். இதுபோக நெகிழி கழிவுகளை பயன்படுத்த சாலை அமைக்க முடியும்
என்று சொல்கிறார்கள். அப்படி இந்த கழிவுகளை பயன்படுத்தவும் ஆராய்ச்சி செய்ய
வேண்டும். நெகிழி பைகள் ,பொருள்கள் தயாரிப்பளர்களை மாற்று மூல பொருள்
கொண்டு தயாரிக்க ஊக்க படுத்தவேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக நெகிழி
பொருட்களை விற்க முன்னறிவிப்பு கொடுத்து தடை செய்ய அரசு முன்வரவேண்டும்
பதிவுசெய்தவர்
முத்து இராசேந்திரன்
08/29/2013 12:35
No comments:
Post a Comment