Tuesday, 24 March 2015

சாலை பாதுகாப்பு கல்வி பள்ளிகளுக்கு தேவையா?அழையுங்க..

ROAD SAFETY LIFE SAFETY -சாலை பாதுகாப்பு நமது கூட்டுப் பொறுப்பு

மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். சாலை பாதுகாப்பு கல்வி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வழங்க வேண்டும் என்ற தீர்மானப்படிபோக்குவரத்துக் காவல்நிலையம்-சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்நிலையம்,லோகு டிரைவிங் ஸ்கூல் சத்தியமங்கலம்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு இணைந்து பள்ளிகளுக்கு சாலை பாதுகாப்பு கல்வி கொடுத்து வருகின்றன.(தேதி 24.மார்ச்.2015)




Thursday, 19 March 2015

ஊத்துக்குளி ரயிலடி /.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி -2015


சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல அது வாழ்க்கை முறை

SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE  (பதிநான்கு)

 மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

             ஈரோடு மாவட்டம் ,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு,   சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி  இணைந்து குழுவாக செயல்பட்டு 2015 இந்த ஆண்டு முதல் அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.


2015மார்ச் 19 ஆம் தேதி இன்று  ஊத்துக்குளி ரயிலடி.
பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் 

காலை10.30மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவக்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி நடத்தப்பட்டது. காலை11.30முதல் 12.40வரை வினாடிவினா நிகழ்ச்சி நடைபெற்றது.மதியம்1.30 மணி முதல்3.00மணி வரை  கலந்துரையாடல் நடைபெற்றது.நன்றியுரை மற்றும் நாட்டுப்பண் இசைத்து நிறைவு பெற்றது.மாலை3.00மணி முதல் மாலை 4.20மணி வரை கணினி பயிற்சி நடைபெற்றது.
  

வரவேற்புரை; .து.ஜோதிகா (பள்ளி மாணவி)


தலைமையுரை.திரு.லோ. பூபாலன் அவர்கள்,தலைமை ஆசிரியர்.


விழிப்புரை.திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.


 சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல்


சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கல்.


தலைமை ஆசிரியர் அவர்களுக்கு நினைவுப்பரிசு (மருந்தின் மரணம் புத்தகம்) வழங்கல்.
புகைத்தலின் தீங்கு பற்றிய செயல்விளக்கம்.


சாலை பாதுகாப்பு கல்வி -
        வினாடிவினா நிகழ்ச்சியில்ஆர்வமுடன்  பங்கு பெற்ற மாணவர் குழுக்களின் பெயர்கள் விவரம்...மிக  விறுவிறுப்பாக இருந்தது...


                  மேலே  உத்தரவுச்சின்னம் மாணவரணியினரும் அடையாள அட்டையும்.


மேலே எச்சரிக்கைச் சின்னம் மாணவரணியினரும் அடையாள அட்டையும்.


          மேலே தகவல் சின்னம் மாணவரணியினரும் அடையாள அட்டையும்.
சாலை பாதுகாப்பு வினாடி வினா நிகழ்ச்சியில் சிறந்த மாணவ,மாணவியருக்கு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கல்.

சாலைப் பாதுகாப்பு வினாடி வினா....
சாலைப் பாதுகாப்பு வினாடி வினா....
சாலைப் பாதுகாப்பு வினாடி வினா....
சாலைப் பாதுகாப்பு வினாடி வினா....
        
             சாலை பயணத்தில் (1)பாதசாரிகள் பிரிவு,(2)மிதிவண்டி ஓட்டுபவர்கள் பிரிவு,(3) பெற்றோருடன் மேட்டார் சைக்கிள் வாகனத்தில் பயணிப்பவர்கள் பிரிவு,(4)பேருந்துகளில் பயணிப்பவர்கள் பிரிவு என நான்கு பிரிவுகளாக பிரித்து மாணவர்கள் சாலைப் பயணத்தின்போது சந்தித்த பிரச்சினைகளும்,பாதிப்புகளும் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி .சிந்தனைக்குரிய நிகழ்ச்சி.....

சாலைப் பயணத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் ...
சாலைப் பயணத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் ...
சாலைப் பயணத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் ...
சாலைப் பயணத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் ...
சாலைப் பயணத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் ...
சாலைப் பயணத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் ...
சாலைப் பயணத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் ...
 நன்றியுரை;மு.கார்த்தி (பள்ளி மாணவன்)

                  இந்த பள்ளி மாணவ,மாணவிகளின் பயணத்தில் சந்தித்துவரும் பிரச்சினைகளை கேட்கும்போது மிகவும் மன வேதனை அடைகிறது.
         மாற்றுக்கருத்து உள்ள நண்பர்கள் போக்குவரத்து கழகத்தின் நண்பர்களாக இருந்தாலும் சரிங்க,ஆட்சித்துறை அலுவலர்களாக இருந்தாலும் சரிங்க,மாவட்ட ஆட்சியராக இருந்தாலும் சரிங்க,அவசியம் ஊத்துக்குளி ரயிலடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சென்று  சாலைப்பயணத்தில் ,பேருந்துப்பயணத்தில் மாணவ,மாணவிகள் சந்தித்துவரும் அவலநிலையை கேட்டறிந்து தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டுகிறேன்.உதாரணமாக பேருந்தில் நடத்துநர்கள் மாணவிகளை அடித்துவிடுவதாக கூறுகின்றனர்.பாதிக்கப்படும் மாணவிகள்  ஒரு பெரிய மனிதர்களின் குழந்தைகளாக இருந்தால் விடுவார்களா? பாவம் அந்த ஏழைக் குழந்தைகள்....இதை எப்படிங்க சகித்துக்கொள்ள முடியும்? 




     கணினி பயிற்சி இணையமும் தமிழில் தட்டச்சுதலும் கருத்தரங்கம்.
தமிழ்'99 ஒலிப்பியல் முறை மிக எளிதானது.தமிழிலேயே சிந்தித்து,இலக்கணப்பிழையின்றி எழுதலாம்.உயிரெழுத்து 12 உம் மெய்யெழுத்து 18 உம் பதிந்துள்ள விசைகள் மட்டும் நினைவில் வைத்திருந்தால் போதுமானது.ஷிப்டு அழுத்தம் வடமொழி எழுத்துக்களுக்கு மட்டுமே பயன்படும்.

Monday, 9 March 2015

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்1986..பயன்கள்

மரியாதைக்குரியவர்களே,
        வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
 
இந்திய தேசிய நுகர்வோர்  குறை தீர்ப்பாணையம்
 (National Consumer Disputes Redressal Commission)
 நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986, (Consumer Protection Act, 1986) 
            இந்தியாவின் நுகர்வோருக்கு ஏற்படும் குறைகள் மற்றும் பூசல்களை களையவும். நேர்மையற்ற, மனசாட்சியற்ற வணிக நோக்கர்களிடமிருந்து நுகர்வோர்களை பாதுகாக்கவும்இந்திய தேசிய  நுகர்வோர் ஆணையம் இந்திய அரசால் கட்டமைக்கப்பட்டது.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நுகர்வோரின் இன்னல்களை, துயர்களை துடைக்கும் பொருட்டு மற்றும் அதற்கான வடிவமைக்கப்பெற்ற சட்டத்தை அமல்படுத்தும் ஆணையமாக கடந்த சில ஆண்டுகளில் செயல்பட்டுவருகின்றது. இவ்வாணையம் மக்களின் குறைகளை விரைவில் தீர்க்க அணுகும் ஊர்தியாகவும், மக்களை பாதுகாக்கவும் மற்றும் செலவில்லாத குறை தீர்ப்பாணையமாகவும் மக்கள் அணுகும் விதத்தில் செயல்படுகின்றது.

இச்சட்ட அமலினால் நுகர்வோர் விற்பனையாளர்களிடம் எச்சரிக்கையுடனும்,   விழிப்புடன் இருக்க தங்களை தீர்மானித்துக் கொள்கின்றனர்.

இச்சட்ட அமலுக்கு முன் வாடிக்கையாளர்கள் விழிப்புடனும் அல்லது வாங்குபவர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்ற நிலையில் நுகர்வோர்கள் தள்ளப்பட்டிருந்தனர்.


குறை தீர்வு மன்றம்
இச்சட்டம் வகுத்துள்ள நிபந்தனையின்படி மைய நுகர்வோர் பாதுகாப்பு மன்றம் ஒன்றை மைய அரசின் நுகர்வோர் குறை தீர்வு அமைச்சக அமைச்சர் தலைமையிலும்,  மாநிலத்தில் மாநில நுகர்வோர் குறை தீர்வு அமைச்சக அமைச்சரின் தலைமையிலும்  நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் பொருட்டு மன்றம் அமைத்திடல் வேண்டும். அம்மன்றம் நுகர்வோருக்கு ஏற்படும் குறைகளை களைந்திட அல்லது தீர்வு கண்டிட வேண்டும்.
கட்டமைவு
தேசிய நுகர்வோர் ஆணையம் 1988  ஆம் ஆண்டில் கட்டமைக்கப்பட்டது. இதன் தலைமை பொறுப்பை அமர்வு அல்லது ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏற்றிருப்பார். தற்பொழுது தலைமை பொறுப்பை ஏற்றிருப்பவர் நீதியரசர் அசோக் பான். இவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார். இவர் தலைவராகவும் அவருடன் கூடிய ஒன்பது பேர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

ஆணையத்தின் ஏற்பாடு
  • இச்சட்டம் வழங்கியுள்ள முன்னேற்பாடுகள் பொருட்கள் அதே நேரத்தில் சேவைகளையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது.
  • பொருட்கள் என்பவை எவரொருவர் அல்லது கூட்டு சேர்ந்தோ தயாரிப்பது அல்லது உருவாக்குவது மற்றும் அதனை மொத்த வணிகர் ம்ற்றும் சில்லரை வணிகரின் மூலமாக நுகர்வோருக்கு விற்பது. 
  • சேவைகள் என்பவை போக்குவரத்து, தொலைபேசி, மின்சாரம், கட்டுமானம், வங்கி சார்ந்த (நிதி மனை சார்ந்த-பண இலேவாதேவி), காப்பீடு, மருத்துவ சிகிச்சை இன்னும் பல.,
  • சேவைகளாக பொதுவாக கூறுமிடத்து வாழ்க்கைத் தொழிலர்களான (Professionals) மருத்துவர்கள், பொறியாளர்கள், கட்டடக் கலைஞர்கள், வழக்குரைஞர்கள் இன்னும் பல., இது போன்றவைகளையும் குறிக்கின்றன.
புகார் அளிக்க
புகாரை நுகர்வோர் எழுத்துமூலமாக ஆணையத்திற்கு நேரிடையாகவோ அல்லது நுகர்வோரின் அதிகாரம் பெற்றவர் எவரும் அளிக்கலாம். அவர் வழக்குரைஞராக இருக்கவேண்டும் என்பதில்லை.  வழக்குகளையும் (புகார் தாரர்) நுகர்வோரே வழக்காடலாம் அல்லது அதிகாரம் பெற்ற எந்தவோரு நபரும் வழக்காடலாம். மனுதாரருக்கு (நுகர்வோருக்கு) துணை நிற்பவர் (உடன் உறைபவர்) எவரும் இலர் என்பதையுணர்ந்து, அப்புகாரின் நேர்மையைக் கருதி ஆணையமே வழக்குப் பிரதிநிதிகளை நியமிக்கின்றது . இம்முறை மேல்முறையீட்டிலும் பின்பற்றுகின்றது.

புகார் ஏற்கும் முறை
மாவட்ட ஆயம்                              ரூபாய் இருபது இலட்சம் வரை
மாநில ஆணையம்                      ரூபாய் ஒரு கோடி வரை
தேசிய ஆணையம்                      ரூபாய் ஒரு கோடிக்கு மேல் உள்ளவைகள்
குறிப்பு இதனுள் அடங்கிய பொருள்களின்  மற்றும் சேவைகளின்  மதிப்புகளை அந்த குறிப்பிட்ட பொருள் சேவை இவைகளின் விலை மதிப்பை குறிப்பதாகும். இதன் பொருளை இலவச சேவைகளுக்கோ, ஒப்பந்த அடிப்படையில் சுய தேவைகளுக்காக ஏற்படுத்துகின்ற பொருளின் மதிப்பைக்குறிப்பதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. சேவை என்பதற்கு மேற்கூறிய விளக்கத்தை ஒரு சுட்டிக்காட்டுபவையாக  எடுத்துக் கொள்ளவேண்டுமே தவிர எல்லாம் அதனுள் அடங்கியதாக  எடுத்துக் கொள்ளக்கூடாது.

கட்டணம் கிடையாது
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மிகவும் மலிவான மாற்று இன்னல் நீக்கும் வழியாக நுகர்வோருக்கு ஏற்கனவே ஏற்பட்ட இன்னல்களை நீக்குவனவாக உரிமையியல் தீர்வின் மூலம் அவர் துயர்களை துடைக்கின்றது. புகார் / மேல் முறையீடு / மனு தாக்கல் செய்வதற்காக இச்சட்டம் வகுத்துள்ளபடி அவர்களிடம் (நுகர்வோரிடம்) எந்தவித கட்டணமோ, செயல் கட்டணமோ வசூலிப்பது கிடையாது.


காலவிரயமின்றி
இதன் சட்டமுறைமைகள், எளிமையானதாகவும், சுருக்கமானதாகவும் இருப்பதாலும், இதன் பெருமுயற்சி தீர்வு காண்பதையே நோக்கமாக கொண்டிருப்பதால் இதன் வழக்குகள் வெகு விரைவில் தீர்வு காணப்படுகின்றன, வெகு விரவில் முடிக்கப்படுகின்றன.

மேல்முறையீடு
நுகர்வோருக்கு மாவட்ட ஆயத்தின் தீர்வு திருப்தியளிக்கவில்லையென்றால் மேல்முறையீட்டுக்கு மாநில ஆணையத்தை அணுகலாம் அதிலும் திருப்தியளிக்கவில்லையென்றால் தேசிய ஆணையத்தை அணுகலாம்.

தேசிய ஆணையம் அமைந்துள்ள இடம்
தேசிய ஆணையத்தின் பதிவு அலுவலகாமக புது தில்லி, ஜன்பத், உள்ள ஜன்பத் பவனில் பி பிரிவு (பி விங்) 7 வது தளத்தில்  அமைந்துள்ளது. ஆணையம் சனி, ஞாயிறு மற்றும் மைய அரசு விடுமுறை நாட்களைத் தவிர, அனைத்து நாட்களிலும் திங்கள் முதல் வெள்ளிவரை காலை 10 மணி முதல் 5 மணி வரை இயங்கும். ஆணையத்தை தொலைபேசி மூலம் அணுகுவதற்கு ஏதுவாக கீழ்கண்ட எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 011-23712109, 23712459, 23389248. தொலை நகல் 23712456.  ஆணையங்கள் நுகர்வோரின் நண்பனாக மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய ஆணையங்கள் செயல்படுகின்றன.
தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணைய இணையதளம்
 நூல் ஆதாராம் Consumer Protection Act, 1986-K.S,Mahalingam. மற்றும் நூகர்வோர் தமிழ் சட்ட நூல்கள், மத்திய அரசு இணையதளம்.
இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 (The Consumer Protection Act, 1986 ) இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையை பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் ஏற்படுத்தப்பெற்றச் சட்டமாகும். ஜூலை 1, 1987 முதல் இச்சட்டம் அமலுக்கு வந்த்து.
இச்சட்டம் 1991 மற்றும் 1993 களில் திருத்தச் சட்டங்களாக வெளிவந்தன். நுகர்வோர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாகவும், அதன் செயற்பாடுகள், முக்கியத்துவங்கள் அதிகரிக்கப்பட்டு டிசம்பர், 2002 இல் புதிய திருத்தச்சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, மார்ச் 15, 2003 புதிய பரிமானங்களுடன் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்த்தது.
இதன்படி வடிவமைக்கப்பட்ட விதிகள் நுகர்வோர் பாதுகாப்பு விதிகள், 1987 என அழைக்கப்படுகின்றன. இந்த விதிகள் மார்ச் 5, 2004  முதல் நாட்டுக்கு அறிமுகம் செய்யப்ப்ட்டது.
முக்கிய கூறுகள்
  • இச்சட்டம் மைய அரசால்  விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளைத் தவிர ஏனைய எல்லா பொருட்களுக்கும், சேவைகளுக்கும் இச்சட்டம் பொருந்தும்.
  • அனைத்துறையின் எதுவாயினும், தனியார் மற்றும் பொதுத் துறை மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் அல்லது தனி நபர் இவை யாவரையும் கட்டுப் படுத்தும். இச்சட்டம் வகுத்துள்ளதின்படி இவர்கள் நட்டஈடு வழங்க அதே சமயத்தில் தடை செய்யவோ,தண்டணை  வழங்கவோ வழி செய்கின்றது.
  • நுகர்வோரை போற்றிப் பேணுகின்ற உரிமைகளாவன;-
(1) உடலுக்கும், உடமைக்கும் தீங்கு விளைகின்ற வகையில் வணிக நோக்கில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளிடமிருந்து நுகர்வோர் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் உரிமை. (2) பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம், எடை, வீரியம், கலப்படமற்ற, தரநிர்ணயம் மற்றும் விலை அறிந்து கொள்ளவும், நேர்மையற்ற வணிகத்தினரிடமிருந்து நுகர்வோர் தங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை. (3) மலிவு அல்லது போட்டி விலைகளில் கிடைக்கும் பலதரப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த நம்பகத்தன்மையை நுகரவோருக்கு உறுதிபடுத்துதல் உரிமை. (4) மலிவான சலுகை விளம்பரங்கள் மற்றும் ஊடகங்களினால் இழுக்கப்பட்டு, அதன் பலனை வணிகத்தினர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டதை தெரிவிக்கும் உரிமை (5) நேர்மையற்றை வணிகத் தொழிலினால் அல்லது மனச்சாட்சியற்ற சுரண்டல்களினால் ஏற்பட்ட பாதிப்பினால் நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தை நாடுதல் உரிமை.

“நுகர்வோரே அரசர்” என்பது சரியானதா???

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம். இந்தப்பதிவில் நுகர்வோருக்கான நீதி பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்...
நுகர்வோர் நீதி-ஒரு கண்ணோட்டம்
ச. ஞானதேசிகன்
மார்ச் 15, உலக நுகர்வோர் தினமாக ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படும் நாளில் நுகர்வோரின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு நீதி வழங்கும் நுகர்வோர் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
“நுகர்வோரே அரசர்” என்ற நிலை இன்றைய சந்தைப் பொருளாதாரச் சூழலில் நிலவினாலும் அது பெயரளவிற்கே பொருந்துகிறது. நிஜவாழ்க்கையில், தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் சேவை நிறுவனங்களினால் ஏமாற்றப்படும் அவல நிலையில்தான் நுகர்வோர்கள் உள்ளனர்.
பணம் செலுத்தி சொந்த உபயோகத்திற்காக வாங்கும் பொருள்கள் அல்லது பயன்பெறும் சேவையில் குறைபாடுகள் இருந்தால் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகலாம்.
இன்றைய நுகர்வோர்கள், பொருளின் தரம், எடைகுறைவு, அதிக விலை, விளம்பரம், போலிப் பொருள்கள், ஏகபோக வணிகத்தின் மூலம் ஏமாற்றப்படும் சூழ்நிலை நிலவுகிறது. உத்தேச மதிப்பீட்டின்படி இந்திய நுகர்வோர்கள் ஆண்டுதோறும் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பில் ஏமாற்றப்படுகின்றனர்.
நுகர்வோர் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வில் நமது நாட்டினர் பின்தங்கிய நிலையில் உள்ளனர். எழுத்தறிவின்மை, ஏழ்மை, வாங்கும் சக்தி குறைவு, அலட்சியம், அக்கறையின்மை ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்கள்.
நுகர்வோர் உரிமைகள்: 1962, மார்ச் 15ம் நாள் மறைந்த அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியால் பிரகடனப்படுத்தப்பட்ட நுகர்வோர் உரிமைகள் யாதெனில் பாதுகாப்புரிமை, தெரிவு செய்யும் உரிமை, தகவல் பெறும் உரிமை மற்றும் குறைகளைத் தெரிவிக்கும் உரிமை.
நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் செயல்படும் பன்னாட்டு நுகர்வோர் அமைப்பு மேலும் மூன்று உரிமைகளை வலியுறுத்தியுள்ளது. அவைகள் இழப்பீடு பெறும் உரிமை, நுகர்வோர் கல்வி, சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் உரிமை.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986: நமது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நுகர்வோர் சம்பந்தப்பட்ட பல சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இயற்றியபோதிலும், நுகர்வோருக்குக்கென்று அவர்களது உரிமைகளைப் பாதுகாக்கவும், நலன் பேணவும் 1986-ல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச் சட்டம் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தைத் தவிர்த்து பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இச் சட்டம் அனைத்து தனியார் நிறுவனங்கள், அரசுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைப்புகளுக்குப் பொருந்தும். இலவசப் பொருள்கள் மற்றும் இலவச சேவைகள் இச் சட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன.
நுகர்வோர் கலாசாரம் பெருகிவிட்ட இக்காலகட்டத்தில் நுகர்வோரின் குறைபாடுகளைத் தீர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நுகர்வோர் குறை தீர்ப்பாணையங்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை.
நுகர்வோர் நீதிமன்றங்கள்: இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986-ன்படி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நீதி வழங்க மூன்றடுக்கு கொண்ட குறை தீர்க்கும் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. முதல் நிலையில் மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம், ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரில் செயல்படுகிறது. ரூ. 25 லட்சத்திற்குக் குறைவாக நஷ்ட ஈடு கோரும் நுகர்வோர் இம் மன்றத்தை அணுகலாம்.
நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் ஆண்டறிக்கையின்படி இந்தியாவில் சுமார் 570 மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 20 லட்சம் நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 2 லட்சம் நிலுவையில் உள்ள வழக்குகள் தவிர பெரும்பான்மையான நுகர்வோர் வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. தீர்வு விகிதம் 88 சதவீதம்.
சிக்கிம் மாநிலத்தில் செயல்படும் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்கள், நுகர்வோர் குறை தீர்ப்பதில் நாட்டிலே முதலிடம் வகிக்கின்றன. தீர்வு விகிதம் 98 சதவீதம். நுகர்வோர் நீதி பெறுவதில் பிகார் மாநில மக்கள்தான் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வருகின்றனர். தீர்வு விகிதம் 76 சதவீதம்.
ரூ.25 லட்சத்திற்கு மேல் ரூ.1 கோடிக்கும் குறைவாக இழப்பீடு கோரும் நுகர்வோர், மாநில நுகர்வோர் குறை தீர்ப்பாணையத்தை அணுகலாம். நாட்டில் தற்போது 34 மாநில நுகர்வோர் நீதிமன்றங்கள் மாநிலத் தலைநகரங்களில் இயங்கி வருகின்றன. இவ்வாணையங்களில் 3,59,276 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 2,41,231 வழக்குகளில் நுகர்வோருக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. மாநில நுகர்வோர் தீர்ப்பாணையத்தின் தீர்ப்பு 67 சதவீதம்.
நுகர்வோருக்கு நீதி வழங்குவதில் நாட்டிலே சண்டீகர் மாநில நுகர்வோர் குறை தீர்ப்பாணையம் முதலிடம் வகிக்கிறது. தீர்ப்பு விகிதம் 97 சதவீதம். அதேவேளையில் மிகக்குறைந்த அளவில் உத்தரப் பிரதேச மாநில நுகர்வோர் குறை தீர்ப்பாணையம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் புதுதில்லியில் செயல்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட நுகர்வோர், ரூ.1 கோடிக்கு மேல் இழப்பீடு கோரினால் தேசிய ஆணையத்தை அணுகலாம். சுமார் 35 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில், 27 ஆயிரம் வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. தீர்வு விகிதம் தேசிய அளவில் 78 சதவீதம்.
பாதிக்கப்பட்ட நுகர்வோர் அவர் சார்ந்த மாவட்ட, மாநில நுகர்வோர் தீர்ப்பாணையங்களை அணுகி இழப்பீடு கோரலாம். நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர ஒரு ரூபாய் கூட நீதிமன்றக் கட்டணமாகச் செலுத்த வேண்டியதில்லை.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி நுகர்வோருக்கு 90 முதல் 150 நாள்களுக்குள் நீதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் பாதிக்கப்பட்ட நுகர்வோர் நீதி பெறுவதில் காலதாமதம் ஆகிறது. தாமதமாக வழங்கப்படும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். தாமதமாக நுகர்வோர் நீதி வழங்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் நிலவுகின்றன.
முதலாவதாக, வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் “”வாய்தா” கேட்பதின் மூலம் நுகர்வோர் வழக்குகள் இழுத்தடிக்கப்படுகின்றன. நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களின் அலட்சியப்போக்கு, அக்கறையின்மை இதற்கு காரணமாக அமைகிறது.
மேலும் நுகர்வோர் நீதிமன்றங்கள் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் செயல்படுகின்றன. பெரும்பாலான நுகர்வோர் தீர்ப்பாணையங்கள் சொந்தக் கட்டடங்களுக்குச் சொந்தக்காரர்கள் அல்ல!
மேலும் நுகர்வோர் நீதிமன்றத்தில் உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் நிரப்பப்படாததால் நுகர்வோர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நுகர்வோர் நீதிமன்றங்கள் வழங்கும் ஆணையை நிறைவேற்றாமல் செயல்படும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கின் காரணமாக நுகர்வோருக்குக் கிடைக்கக்கூடிய நீதி மேலும் தாமதமாகிறது.
மேற்கூறிய குறைகளைத் தவிர்க்க கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நுகர்வோர் நலனைப் பேணலாம்.
வழக்கறிஞர்கள் அதிக அளவில் “வாய்தா’ வாங்குவதைத் தவிர்க்க வழிவகை செய்யவேண்டும். தலைவர் மற்றும் உறுப்பினர்களை விரைந்து, முன்கூட்டியே நியமிப்பதன் மூலம் வழக்குகள் தொய்வில்லாமல் நீதி வழங்க வகை செய்ய வேண்டும். நுகர்வோர் நீதிமன்ற உள்கட்டமைப்பு வசதிக்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள் தாராள நிதி வழங்க வேண்டும். நிதி வழங்குவதிலும், நீதி வழங்குவதிலும் காலதாமதம் கூடாது. நுகர்வோர் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பை விற்பனையாளர்கள், சேவை நிறுவனங்கள் விரைந்து நிறைவேற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நீதிமுறைப்படி கிடைக்கிறதா என்பதை அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
நுகர்வோர் தாம் பயன்படுத்தும் பொருள்கள் மற்றும் சேவையில் உள்ள குறைகளைத் தீர்க்க நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகுவதுபோல், நுகர்வோர் நீதிமன்றத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அரசின் தார்மிகக் கடமையாகும்.
“”நலம் சார்ந்த அரசு” நுகர்வோர் நலன் பேணட்டும் என்று இன்றைய தினத்தில் சூளுரைப்போம்.
(கட்டுரையாளர்: வணிகவியல்துறைத் தலைவர், டாக்டர் என்.ஜீ.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்).

வங்கிகளில் பணத்தை பாதுகாப்பாக சேமிப்போம்.நமது பொறுப்புகளையும் தெரிந்துகொள்வோம்.


மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
வங்கிகளில் பணத்தை பாதுகாப்பாக சேமிப்போம்.நமது பொறுப்புகளையும் தெரிந்துகொள்வோம்.
 வங்கி வாடிக்கையாளர் கவனத்திற்கு…
( பதிவிட்ட திரு. இரா. எத்திராஜன் அவர்களுக்கு நன்றிங்க....)
              (1)*அனைத்து வங்கிகளும் கணினி முறையில் இயங்குவதால் காசோலைகளை வங்கியில் டெபாசிட் செய்யும்போது, காசோலையில் கண்டிப்பாக ஸ்டேப்லர் பின் போடக்கூடாது. அதற்குப் பதிலாக, காசோலையை, வங்கிப் படிவத்துடன் இணைத்து குண்டூசி போடலாம்.

           (2)*காசோலையை மற்றவர்களுக்கு வழங்க நேரிடும்போது, காசோலையில், நிறுவனம் அல்லது பெறுபவரின் பெயர், பணத்தின் மதிப்பை எண் மற்றும் எழுத்தாலும் மிகவும் தெளிவாகக் குறிப்பிட வேண்டியது அவசியம்.
           (3)*ரூபாய் நோட்டுகளில் உள்ள வெள்ளைப் பகுதியில் எழுதுவது குற்றமாக ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. எனவே ரூபாய் நோட்டுகளில் தங்களின் சொந்தக் குறிப்புகளை எழுதுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
          (4)*வங்கி பாஸ் புத்தகத் தகவல்களை நாள்தோறும் சரிபார்க்க கண்டிப்பாக நேரம் ஒதுக்க வேண்டும்.
             (5)*வங்கி பாஸ் புத்தகத்தை மடக்கி வைத்தல் கூடாது. ஏனெனில் பாஸ் புத்தகத் தகவல்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்ய நேரிடும்போது, மடக்கப்பட்ட புத்தகம் கம்ப்யூட்டரில் நுழைவது கடினமாக இருக்கும்.
          (6)*வங்கி வாடிக்கையாளர்கள் நாள்தோறும் நாளேடுகளில் வங்கிகளைப் பற்றி வெளிவரும் செய்திகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் வங்கித் துறையில் ஏற்படும் புதிய மாற்றங்களை வங்கி கிளையில் அமைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையின் மூலம் தெரிந்துகொள்ளவேண்டும்.
            (7)*வங்கி கிளையின் தொலைபேசி எண்ணை குறித்து வைத்துக்கொள்வது நல்லது.
               (8)*வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் தொலைபேசி எண் மற்றும் இருப்பிடங்கள் மாற்றத்தின்போது, கண்டிப்பாக கடிதம் மூலம் வங்கி கிளைக்குத் தெரிவிப்பது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நல்லது.

எது வங்கியின் சேவைக் குறைபாடு?

 மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். வங்கி குறைபாடுகள் எவை? எவை? என அறிவோம்.
      1. வங்கி அதிகாரிகள் தரக்குறைவாகவோ, அவமானப்படுத்தும் விதமாகவோ நடந்துகொண்டாலோ ,
2. ரிசர்வ் வங்கி வரையறுத்துள்ள விதிகளுக்கு முரணாக நடந்துகொண்டாலோ,
3. குறிப்பிட்ட வட்டி விகிதத்தை விடக் கூடுதலாக வாங்கினாலோ,
4. நியாயமான ஒரு குறைபாடு குறித்து நிவர்த்தி செய்ய வழிமுறை கேட்டவர் மீதே குற்றம் சுமத்தினாலோ,
5. போதிய நியாயமான காரணமின்றி உரிய நேரத்திற்குள் செக் கலெக்‌ஷன் ஆகாமல் இருந்தாலோ,
6. குறிப்பிட்ட நபருக்கோ, நிறுவனத்திற்கோ வங்கிக் கணக்கிலிருந்து தனது பணம் செல்லக் கூடாது என்று கடிதம் கொடுத்தும் வங்கி, பணம் கொடுத்திருந்தாலோ (யாருக்காவது செக் கொடுத்திருந்து பின்னர் பிரச்சினையாகிவிட்டால் அவருக்கு நாம் கொடுத்த செக் மூலம் பணம் சென்றுவிடும்),
7. காரணமின்றி அலைக்கழித்தாலோ அதெல்லாம் வங்கியின் சேவைக் குறைபாட்டின் கீழ் வரக் கூடியதே.

நமக்கு தெரிவிக்காமல் நமது வங்கி கணக்கை முடிக்க முடியாது..

மரியாதைக்குரியவர்களே,
      வணக்கம். நம்மிடம் தெரிவிக்காமல் நம்முடைய வங்கி கணக்கை முடிக்க முடியாது..இதோ ஒரு உதாரணம்.
 

வாடிக்கையாளருக்கு முன்கூட்டி தகவல் அளிக்காமல், வங்கிக் கணக்கை          முடிக்க முடியாது என்று டெல்லி நுகர்வோர் குறைதீர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானரில் கணக்கு வைத்திருக்கும் டெல்லி, கரோல்பாக் பகுதியைச் சேர்ந்த பிரபாகரின் வங்கிக் கணக்கில் சமீபத்தில் இரண்டு காசோலைகளை பரிமாற்றம் செய்த வங்கி, மூன்றாவது காசோலையை காரணம் கூறாமல் நிராகரித்தது. கேட்டதற்கு, ‘கே.ஒய்.சி. எனப்படும் அடையாள ஆவணங்கள் தரவில்லை’ என்று கூறி, வங்கிக் கணக்கு முடிக்கப்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
‘எனக்கு தகவல் தெரிவிக்காமல் இப்படி செய்தது முறையல்ல. இதனால், மனஉளைச்சலுக்கு ஆளானேன்’ என்று கூறி, நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகாரளித்தார் பிரபாகர். இதை விசாரித்த நுகர்வோர் குறைதீர்மன்றம், ‘வாடிக்கையாளருக்கு தகவல் தராமல் கணக்கை வங்கி தன்னிச்சையாக முடிக்க முடியாது. கே.ஒய்.சி. விதிமுறைகளை வாடிக்கையாளர் அளிக்க வேண்டியதை முன்கூட்டி தெரிவித்திருக்க வேண்டும். இது சேவைக் குறைபாடு. மனுதாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு 15,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும், அவரது கணக்கைத் தொடரவும் வங்கிக்கு உத்தரவிடுகிறோம்’ என்று தீர்ப்பளித்தது.